தமிழ்நாடு

”இந்தியாவிலேயே மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை செந்தில் பாலாஜி மாற்றியமைப்பார்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கடந்த 10 நாட்களில் 2லட்சத்து 70,000 மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

”இந்தியாவிலேயே மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை செந்தில் பாலாஜி மாற்றியமைப்பார்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை இந்தியாவிலேயே மின்மிகை மாநிலமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றிக்காட்டுவார் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம், தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், க. சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ. கருணாநிதி , அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, சி.வி.எம்.பி. எழிலரசன், செல்வபெருந்தகை, ஹசன் மெளலானா ஆகியோர் பங்கேற்றனர்.

காலை வடக்கு மண்டல அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் முடித்தபின் தற்போது தெற்கு மண்டல மின்வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு மின்வாரியம் தொடர்பான தேவையான கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இதில் பேசிய மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, “மெகா ஆய்வுக் கூட்டம் மின்சார வாரிய வரலாற்றில் முதன்முறையாக நடைபெறுகிறது. அடுத்த 9 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆய்வுக்கூட்டம் நடைபெறு இருக்கிறது. கடந்த 10 நாட்களில் பராமரிப்பு பணிகளின் போது, சென்னை மண்டலத்தில் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரம் இடங்களில் மின் இணைப்புகளோடு தொடர்பில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இது போன்ற மெகா பராமரிப்பு பணி மூலமாக, இவ்வளவு நாட்களாக செய்யாமல் இருந்த பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மின் இணைப்பு தொடர்பாக, மின்னகம் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் அனைத்தையும் முறையாக பின்பற்றி, பயனாளர்களுக்கு போன் செய்து பிரச்சனை சரி செய்யப்பட்டதை உதவிப் பொறியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் மட்டும் மின் துறைக்கான பிரத்யேக கால் சென்டர் தொடங்கப்பட்ட பின் 40 ஆயிரத்து 500 புகார்கள் வந்திருந்தன. அதில் 31 ஆயிரம் குறைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. கிட்டதட்ட 75% குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது குறைக்கப்பட்டு கிரீன் எனர்ஜி மூலம் அதிக மின்சாரம் தயாரிக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக மின்மிகை மாநிலமாக மாறும் என்றார்.

அடுத்ததாக பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

”1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமையில் விட்டு சென்றுள்ளது கடந்த கால ஆட்சி. 2 லட்சத்து 28 ஆயிரம் பணிகள் மேற்கொள்ள இருந்த நிலையில் 2 லட்சத்து 70 ஆயிரம் பணிகள் கடந்த 10 நாட்களில் முடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 42 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

4,23,000 விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த அரசு மின்மிகை மாநிலம் என கூறியுள்ளது. நம் தேவையை நாமே உற்பத்தி செய்யும்போது தான் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறும். ஆகவே நம் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories