தமிழ்நாடு

“அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அனுமதியில்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் பணி ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இவ்வாய்வு கூட்டத்தில் இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இல.நிர்மல்ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.கதிரவன், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.பிருந்தாதேவி, பொது மேலாளர்கள் ஆர்.பிரியா, ஹென்றி ராபர்ட் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் இயக்குநர் சுதர்சன் மற்றும் உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இந்நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரையில் கனிம வருவாய் ரூ.161 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தருமபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு மேலும் வருவாய் ஈட்டிட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு, அதிக அளவில் வாகனங்களை கைப்பற்றி கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து மாநில அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டி தருமாறும், உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து, உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

“அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் துரைமுருகன் அதிரடி!

மாவட்ட மற்றும் மண்டல பறக்கும்படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தை ஆய்வு செய்த அமைச்சர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகி மண்டலம், ரெண்டாடி, கொடக்கல் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள கருப்பு கிரானைட் குவாரி பணிகளை விரைந்து தொடங்கிட உரிய நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும், தற்போது இயக்கத்தில் உள்ள குவாரிகள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தியினை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி இலாபகரமாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முழுவீச்சில் மேற்கொள்ளவும், புதிய கனிம வள பகுதிகளை கண்டறிந்து அவற்றுக்கு சுரங்க குத்தகையை தரவும் அதனை லாபகரமாக சந்தைப்படுத்தவும் அலுவலர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேலம் மாவட்டத்தில் 238 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் மேக்னசைட் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் கச்சா மேக்னசைட் முழுவதும் சுழற்சூளைப் பிரிவு மற்றும் நிலைச்சூளைப் பிரிவு ஆகிய இரு தொழிற்சாலைகளில் பல்வேறு தரங்களாக முழு எரியூட்டப்பட்ட மேக்னசைட், மித எரியூட்டப்பட்ட மேக்னசைட் பொருட்களாகத் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்பொழுது சுற்றுச்சூழல் அனுமதியுடன் இயங்கி வருகிறது. செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் இயக்கிட நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்” என தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories