தமிழ்நாடு

“பொருளாதார வல்லுநர் குழு: தமிழகத்தில் வியத்தகு முன்னேற்றம் நடக்கும்” : ஸ்ரீதர் சுப்பிரமணியன் கருத்து!

தீர்வை நோக்கிப் பயணித்திருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும் என சமூக ஆய்வாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

“பொருளாதார வல்லுநர் குழு: தமிழகத்தில் வியத்தகு முன்னேற்றம் நடக்கும்” : ஸ்ரீதர் சுப்பிரமணியன் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த பொருளாதார வல்லுநர் குழுவின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் வியத்தகு முன்னேற்றம் இங்கே நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என சமூக ஆய்வாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஆய்வாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசு மாநிலப் பொருளாதாரத்தை முடுக்கிவிட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டாஃப்லோ, இந்தியாவை மையமாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தி வரும் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், முன்னாள் நிதியமைச்சக செயலர் எஸ்.நாராயண் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் குறித்து நமக்கெல்லாம் தெரியும். எஸ்தர் டாஃப்லோ அபிஜித் பானர்ஜியின் மனைவி. வளர்ச்சிப் பொருளாதார ஆய்வுகளில், (randomised control trial) உத்திகளை புரட்சிகரமாக புகுத்தி பொருளாதார ஆய்வுகளின் தன்மையையே மாற்றியதற்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. இவர்களின் புத்தகங்களை மேற்கோள் காட்டி நான் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்.

“பொருளாதார வல்லுநர் குழு: தமிழகத்தில் வியத்தகு முன்னேற்றம் நடக்கும்” : ஸ்ரீதர் சுப்பிரமணியன் கருத்து!
ஸ்ரீதர் சுப்பிரமணியன்

ஜீன் ட்ரீஸ் இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல், அவர்களின் பொருளாதார நிலை குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவை குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதி இருப்பவர். ‘ஜோல்னாப் பைக்காரர்களின் பொருளாதாரம்', Jholawala Economics என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் பெரும் புகழ் பெற்றது.

அவரது பல்வேறு கட்டுரைகளை நானே அவர் அனுமதியுடன் மொழி பெயர்த்து பதிந்திருக்கிறேன். பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த அவர் லெவலுக்கு இந்தியாவின் விளிம்பு நிலைப் பொருளாதாரம் குறித்து இந்தியர்களே அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இந்தப் பெயர்களை எல்லாம் ஒருங்கே ஒரு கமிட்டியில் பார்க்கும் பொழுது பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது. இதெல்லாம் கனவா என்று ஒரு முறை என்னைக் கிள்ளியே கூட டெஸ்ட் பண்ணிப் பார்த்துக் கொண்டேன். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த இவர்களின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள் ஏற்கப்பட்டு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் வியத்தகு முன்னேற்றம் இங்கே நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

A problem clearly stated is a problem half solved, என்று ஒரு ஆங்கில சொலவடை இருக்கிறது. ஒரு பிரச்சினையை தெளிவாக வரையறுத்து விட்டால் அது பாதி தீர்க்கப்பட்டதற்கு சமம். அதற்கு முதல்படியாக பிரச்சினைகளை புரிந்து கொள்ளப் பொருத்தமான நிபுணர்களை நியமித்து விட்டால் அந்தப் பிரச்சினை கால்வாசி தீர்ந்ததற்கு சமம். அந்தக் கால்வாசி தீர்வை நோக்கிப் பயணித்திருக்கும் தமிழ் நாட்டு அரசுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories