தமிழ்நாடு

சேலத்தில் போலிஸ் தாக்குதலால் விவசாயி பலி... எஸ்.எஸ்.ஐ கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம்!

விவசாயி போலிஸ் தாக்குதலால் பலியான விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் போலிஸ் தாக்குதலால் விவசாயி பலி... எஸ்.எஸ்.ஐ கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே வாகன தணிக்கையின்போது எடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி லத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

எடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் மது அருந்திவிட்டு சோதனைச்சாவடி வழியே வந்ததாகவும், வாகன தணிக்கையின்போது அவரை நிறுத்திய காவல்துறையினருக்கும் முருகேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதில் எஸ்.எஸ்.ஐ பெரியசாமி முருகேசனை தாக்கியுள்ளார். காயமடைந்த முருகேசன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து முருகேசன் நேற்று மாலை அரசு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து முருகேசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் குவிந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எஸ்.எஸ்.ஐ பெரியசாமி மற்றும் அவருடன் இருந்த காவல்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவந்தது. விசாரணை அடிப்படையில் எஸ்.எஸ்.ஐ பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories