தமிழ்நாடு

“மக்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உயிர்பெற்ற அரசு மருத்துவமனைகள்” - அழகப்பா பல்கலை பேரா., புகழாரம்!

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’ என்று சொல்லி இருகரம் கூப்பி கண்களில் நீர் கசிந்தோடி, “நன்றிகள் மக்களின் முதல்வரே” என சொல்லுவதைத் தவிர தமிழிலும் வேறு வார்த்தைகள் இல்லை

“மக்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உயிர்பெற்ற அரசு மருத்துவமனைகள்” - அழகப்பா பல்கலை பேரா., புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி குறித்து பாராட்டியுள்ளார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இதழியல், ஊடகம் மற்றும் வாழ்நாள் கற்றல் இயல் துறை பேராசிரியர் அருணாச்சலம்.

இது தொடர்பாக முரசொலி நாளேட்டில் வெளி வந்துள்ள தொகுப்பு:

இறைவன், தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது, என்பதற்காகத் தாயைப் படைத்தான், அந்த உயிர் கொடுத்த தாயின் உயிரை இந்தப் பெருந்தொற்றுக்கு இரையாக்க எவருக்குத்தான் மனம் வரும்? இன்றைய பேரிடர் பெருந்தொற்றுக் கொடும் சூழலில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் அவர்களின் தாய் போன்ற கருணை நடவடிக்கைகளால் ஒரு வயோதிகத் தாயின் மறுபிறப்பு அரசு மருத்துவமனையில் உயிர் பெற்று உள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற நிலையில் எத்தனை தாய்மார்கள், சகோதர சகோதரிகள், பெரியவர்கள், குழந்தைகள், தமிழக மக்கள் அந்த வயோதிகத் தாயைப் போல் தற்பொழுது மீண்டு உயிர் பிழைத்து வந்துள்ளார்கள்.

அதை ஒரு தாயின் மகனாகப் பார்க்கும் பொழுது, கொடையும், அன்பும், செங்கோல் முறையும், குடி மக்களைக் காத்தல் நிலையையும் தன் செயல் மூச்சாய் உடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்களே "மக்களின் முதலமைச்சர்". மேலும் நீங்கள் மக்களைக் காப்பதில் உங்கள் உயிரையும் துச்சமாக மதித்து உங்கள் அரசின் மூலம் ஆற்றி வரும் பணிகள் மற்றும் துரிதகால உயிர் காக்கும் நடவடிக்கைகள் எல்லாம், நீங்கள் அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்ற வழிகாட்டி என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதை அய்யன் வள்ளுவர் சொன்ன குறள் மூலம் "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி' என்று சொல்லி இருகரம் கூப்பி, கண்களில் நீர் கசிந்தோடி, "நன்றிகள் மக்களின் முதல்வரே" என்று சொல்லுவதைத் தவிர என்னிடமும் தமிழிலும் வேறு வார்த்தைகள் இல்லை.

பெரு நிறுவன அமைப்பும் சொகுசுப் பராமரிப்பும் கொண்ட தனியார் மருத்துவமனைகளில், பெரும் பணம் செலவழித்தால் மட்டுமே உயிர்கள் காக்கப்படும் என்கிற மாயை, இந்த நல்லாட்சியில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நகரங்களில் மட்டும் இல்லாமல் தரமான மருத்துவம் தற்பொழுது தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களையும் உள்ளடக்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக முதலமைச்சரால் உயிர் பெற்று எல்லோர் உயிரையும் காத்து வருகிறது. உயிர் போகும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கைவிடப்பட்ட பெருந்தொற்றாளிகளை இன்று அரசு மருத்துவமனைகள் பூரண குணம் அடையச் செய்யும் நிலை தமிழக முதலமைச்சரால் ஏற்பட்டுள்ளது. தமிழக தென் கிழக்குப் பகுதியின் ஒரு பெருநகராட்சி நகரத்தை ஒட்டிய கிராமத்தில், இணைநோய்களை மொத்தமாகக் கொண்ட அந்த வயோதிகத் தாய் இந்த இரண்டாவது பேரலையில் பெருந்தொற்றைத் தானும் சுமந்தாள்.

வழக்கம்போல் தனியார் மருத்துவமனைக்குப் படை எடுத்துத் தெரிந்தும் தெரியாமலும் மொய் எழுதி, தாயை மீட்கப் போராடிய அந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆசிரியரும் அவர் தம் மகன்களும் அரசின் விழிப்புணர்வுக் கருத்துகளைக் கடைபிடித்து தங்களுக்குத் தொற்று வராமல் இருந்து கொண்டு, அந்த வயோதிகத் தாயை மீட்கப் போராடினார்கள். விதி வலியது, அந்த வயோதிகத் தாய், தொற்றின் வீரியத்தால், மூச்சுத் திணறலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வலிமை குன்றத் தொடங்கினார்கள். தனியார் மருத்துவமனைகள் வயோதிகம் மற்றும் இணை நோய்கள் இருப்பதைக் குற்றம் எனக்கூறிக் கை விரித்தார்கள். சிலர் சற்றுத் தொலைவில் உள்ள மாநகரத்தின் பெருநிறுவன தனியார் மருத்துவமனைக்கு காத்திருப்போர் பட்டியலில் மருத்துவ சிறப்பு விருந்தினர் அனுமதிக்கு முன் பணம் கட்டச் சொன்னார்கள்.

அதுவரை அந்த வயோதிகத் தாயின் மூச்சு திணறுமா, இல்லை என்னாவாகும் என்கிற சமூக அக்கறை அங்கு இல்லை. பெருநகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அத்தனைத் தனியார் மருத்துவமனைகளும் உரிய சிபாரிசு இல்லாத நிலையில் தன் கதவுகளை மூடிக்கொள்ள, அந்த வயோதிகத் தாய் மரண பயத்துடன், சிக்கலான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்லாட்சியின் சுகாதார நடவடிக்கைகளால் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவரும் அந்த வயோதிகத் தாய்க்கு தனியார் மருத்துவமனைகளில் இல்லாத உயரிய உயிர் காக்கும் சிகிச்சையை அளித்து உயிர் பிழைக்க வைத்தார்கள். அரசு மருத்துவமனையில் அந்த வயோதிகத் தாய்க்கு அங்கு சிகிச்சை பெற வந்த அனைவருக்கும் எந்தப் பாகுபாடு இன்றி தினம் தினம் காலை எழுந்ததும் சத்துமாவுக் கூழ், மூன்று வேளைகளும் தரமான ஊட்டச்சத்து மிக்க உணவுகள், காலையும் மாலையும் அவித்துத் தரப்பட்ட தானிய வகைகள், கெட்டியான பால், பழங்கள் அனைத்தையும் நேரம் தவறாமல் உரிய மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் வழங்கி வந்தார்கள்.

மேலும் நீரிழிவு ஏற்படாமல் இருக்க எலெக்ட்ரோல் அனைவருக்கும் தரப்பட்டது. ஊரடங்கின்போது தொற்றாளிகள் வந்து பின், குணம் பெற்ற பின் செல்ல, இருபத்து நாலு மணி நேரமும் இரண்டு வாகனங்கள் தயார் நிலையில் இருந்து பணியாற்றிக் கொண்டு இருந்தது. அரசு மருத்துவமனைகளில் இதுவரை பீடித்து இருந்த‘ஏதாவது கவனியுங்க', ‘அப்பதான் காரியம் நடக்கும்"" என்கிற தொற்று முற்றிலுமாக மக்களின் முதல்வர் ஆட்சியில் ஒழிக்கப்பட்டு இருந்தது.‘அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது, தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ளவேண்டும்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போல மக்களின் முதலமைச்சர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரியணையில் அமர்ந்த 20 நாட்களில் வெறும் புகழுக்காக முடிசூட்டிக் கொள்ளாமல் தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களைப் பாதுகாப்பதில் இந்தியாவிலே முன்னோடியாக விளங்குகிறார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

சனநாயக நாட்டின் சாமானியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் அனைத்து உரிமைகளையும், உரிய அடிப்படை வசதிகளையும், தகுந்த சுகாதாரப் பாதுகாப்பையும் எந்தவித பாகுபாடும் இன்றி முழுமையாகப் பெற முடியும் என்பதை இன்று தமிழகம்தான் தேர்ந்தெடுத்த மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலம் அடைந்துவிட்டது. மக்களின் முதல்வரால் இன்று உயிர்பெற்ற அனைத்து அரசு மருத்துவமனைகள் போல், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் சீர் பெறும் என்கிற நம்பிக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியதைப்போல், அவருக்கு ஓட்டுப் போட்ட மற்றும் ஓட்டுபோடாத அனைத்து தமிழக மக்களின் மனதிலும் நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞர் அவர்கள் தம் திருக்குறள் உரையில் சொன்ன மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்கிற வாழ்க்கை அளவுருக்கள் அத்தனையையும் இன்று தன் மக்களுக்கு, முதன்மை மற்றும் முன்னுரிமையாக அளித்துப் பாதுகாத்து வரும்தமிழக "மக்களின் முதலமைச்சர்" மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு பல்துறைகளில் மேம்பட, நாம் அனைவரும் சுகாதார விழிப்புணர்வையும், தற்காலிக ஊரடங்கு விதிமுறைகளையும் முழுமையாகக் கடை பிடித்து, பாதுகாப்பாய் வீட்டில் இருந்து கொண்டு வெளியில் செல்லாமல் நம்மையும் நம் நாட்டையும் பெருந்தொற்றுப் பேரிடரில் இருந்து விரைவில் மீட்டுஎடுப்போம்

banner

Related Stories

Related Stories