கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி காலை 4 மணி முதல் 24-ந்தேதி காலை 4 மணி வரை ஊரடங்கை அறிவித்தார். அப்போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் போன்றவை தோட்டக் கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இ-வணிக நிறுவனங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்கு தடையின்றி வீட்டு வாசலிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தவும், அடுத்த மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்ல தேவையான அனுமதி பெறவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குனர்கள், தோட்டக் கலைத்துறையை சேர்ந்த இணை மற்றும் துணை இயக்குனர்களை தொடர்புக்கொள்ள அரசால், அவர்கள் ‘டெலிபோன்’ எண்களோடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு மேலும் வருகிற 7-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த முறை காய்கறி, பழங்கள் விற்பனை மட்டுமல்லாமல் மளிகை பொருட்களையும் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்புகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியுமா? என்று ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் மாவட்ட கலெக்டர்கள் மிக தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இது சாத்தியம், என்பதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு எல்லாம் மிகுந்த பலன் அளிக்கும் வகையில் எல்லா பொருட்களும் வீடு தேடி வந்து, கிடைப்பதோடு, மிக, மிக குறைந்த விலையில் கிடைத்தும் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 42 ஆயிரத்து 864 வாகனங்கள் மூலம் காய்கறிகள் எடுத்து கொண்டு வரப்பட்டு, அவர்களிடம் இருந்து மூன்று சக்கர வண்டிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் பிரித்து, ஏராளமான வாகனங்கள் குடியி ருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்து வருகின்றன.
எல்லா வாகனங்களிலும் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலி பெருக்கிகள் மூலம் அந்த வாகனங்கள் வரும்போது அறிவிப்பும் வெளியிடப்படுகிறது. வீடுகளின் அருகில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் வரும்போதே, "வாங்கம்மா வாங்க, காய்கறி வாங்க, வாங்க... பழங்கள் வாங்குவதற்கு வாங்க..." என்ற சத்தம் எப்போது கேட்கும் என்று இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மட்டும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 964 டன்கள் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னை நகரில் காய்கறி விலையை பார்த்தால் நாம் காண்பது கனவா? நனவா? என்று இருக்கிறது. கோயம்பேட்டில் தக்காளியின் மொத்த விலை கிலோ ரூ.8-க்கும், சில்லரை விற்பனை விலை ரூ.15-க்கும் விற்கப்படுகிறது. வண்டிகளில் விற்கும் போது சற்று கூடுதலான விலைக்கு கிடைக்கிறது. மொத்தத்தில் விலையும் குறைவு, மளிகை பொருள், காய்கறிகள், பழங்கள் எல்லாமே வியாபாரிகளாலும், கடைக்காரர்களாலும் வீட்டு வாசலில் வந்து கிடைக்கிறது, வெளியே நடமாட்டமும் குறையும் என்ற வகையில் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்பது இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.