தமிழ்நாடு

“‘வாழ்த்துகள் ஸ்டாலின்’ என்று சொல்வீர்களா தலைவரே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்! - (வீடியோ)

‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காணொளி வெளியிட்டுள்ளார்.

“‘வாழ்த்துகள் ஸ்டாலின்’ என்று சொல்வீர்களா தலைவரே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்! - (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (03.06.2021) தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு:-

திருவாரூரில் கருவாகி -

தமிழகத்தையே தனதூராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர் -

முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் -

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே!

இன்று நீங்கள் பிறந்த சூன் 3!

இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல -

உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான

உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்.

அதனால்தான் கழகத்தின் கண்மணிகளாம்

கருப்பு சிவப்புத் தொண்டர்கள் அனைவருக்கும்

தனித்தனிப் பிறந்தநாள்கள் இல்லை.

எல்லோர்க்கும் பிறந்தநாள் இந்த சூன் 3!

வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தமிழ்த் தாலாட்டில் - உங்களுக்குக் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்குப் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எங்களது ஆருயிர்த் தலைவரே!

இந்த சூன் 3 - நான் கம்பீரமாக வருகிறேன்.

உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லத் தலைநிமிர்ந்து வருகிறேன்!

ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வருகிறேன்.

தலைவருக்குக் கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன்!

நீங்கள் மறையவில்லை, மறைந்து இருந்து என்னைக் கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைப்பேன்.

இப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள்.

அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள்,

'யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்' என்று!

உண்மையில் தலைவரே! தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன்.

செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நானல்ல, என்னுள் இருந்து நீங்கள் தான் செயல்பட வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்!

உங்கள் சொல் - எனக்கு சாசனம்!

உங்கள் வாழ்க்கை - எனக்குப் பாடம்!

உங்கள் பாராட்டே - எனக்கு உயிர்விசை!

உங்கள் குரலே - எனக்கு தேனிசை!

உங்களது வார்ப்பான நான் இந்த சூன் 3 உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன்.

'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே!” என இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories