தமிழ்நாடு

“மனசாட்சியோடு பேசுங்கள்; கொரோனாவில் அரசியல் செய்ய வேண்டாம்” - அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் மூர்த்தி பதில்!

அரசியல் பேச இது நேரம் அல்ல என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் விமர்சனத்துக்கு அமைச்சர் பி.மூர்த்தி பதிலளித்தார்.

“மனசாட்சியோடு பேசுங்கள்; கொரோனாவில் அரசியல் செய்ய வேண்டாம்” - அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் மூர்த்தி பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மடீசியா (மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிலதிபர்கள் சங்கம்) அரங்கில் கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு வாரத்துக்குள் படுக்கை வசதியுடன் மினி கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்படும். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை.

தமிழக முதல்வர் அவருடைய சீரிய முயற்சியின் விளைவாக தமிழகம் எங்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரத்துறையினர் தொற்றைக் குறைக்க போராடி வருகின்றனர்.” என்றார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பி.மூர்த்தி, “சுகாதாரப் பணிகளில் பாரபட்சம் பார்ப்பதாகவும், அதிகாரிகள் மாற்றத்தால் பணிகள் தொய்வு அடைந்துள்ளதாகவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேசுகின்றனர்.

அவர்கள் மனிதாபிமானத்தோடும், மனசாட்சியோடும் பேசவேண்டும். சில தவறான குற்றச்சாட்டுகளை காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் பெயரளவில்தான் அம்மா கிளினிக்குகள் திறக்கப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. தற்போதைய அரசு முழுமையாகச் செயல்படுகிறது.

அரசியல் செய்வதற்கான நேரம் இது அல்ல. கொரோனா பரவலை முழுமையாக ஒழித்தபின் உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் சரியான விளக்கம் தரப்படும். இப்போது எதிர்க்கட்சியினர் நல்ல ஆலோசனையை மட்டும் வழங்கினால் போதும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories