தமிழ்நாடு

“ஏழு பேரையும் விடுதலை செய்க” - குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“ஏழு பேரையும் விடுதலை செய்க” - குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட நேற்று ஆணையிட்டார்.

இந்நிலையில், இன்று எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை, டி.ஆர்.பாலு எம்.பி. இன்று குடியரசுத் தலைவரிடம் நேரில் அளித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியுள்ளதையும், 'அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும், சுட்டிக்காட்டி 19.5.2021 (நேற்று) குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories