தமிழ்நாடு

கொரோனா நிதி அனுப்பிய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - மதுரையில் நெகிழ்ச்சி!

தாம் சேர்த்து வைத்த 1,000 ரூபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிளை பரிசாக வழங்கி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா நிதி அனுப்பிய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - மதுரையில் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த பணத்தை கொரோனோ நிவாரண நிதியாக வழங்கிய சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ-தீபா தம்பதியின் 7 வயது மகன் ஹரீஸ்வர்மன், தான் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கொரோனோ பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தான்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளான். இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி மூலம் சிறுவனுக்கு ஒரு புதிய சைக்கிளையும் வாங்கி கொடுத்து போனில் நேரடியாக தொடர்பு கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிறுவனிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், தற்போது கொரோனோ காலம் என்பதால் வெளியே சைக்கிள் ஓட்ட வேண்டாம் எனவும் நன்றாகப் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அப்போது மழலை பேச்சில் வாழ்த்துகளை தெரிவித்த சிறுவன் ஹரீஸ்வர்மன், தமக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தமைக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தான். சிறுவனின் செயலைப் பாராட்டி முதல்வர் சைக்கிள் வாங்கி கொடுத்துடன் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories