தமிழ்நாடு

“பைந்தமிழ் நூல்களை தேடித்தேடிப் பதிப்பித்தவர் தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகனார்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மூத்த பதிப்பாசிரியர் கோ.இளவழகனார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பைந்தமிழ் நூல்களை தேடித்தேடிப் பதிப்பித்தவர் தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகனார்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மூத்த பதிப்பாசிரியர் தமிழ்மண் கோ.இளவழகனார் மறைவையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் “பைந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித்தேடித் திரட்டிப் பதிப்பித்த பெரியவர் தமிழ் மண் பதிப்பகம் அய்யா கோ.இளவழகனார் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நூல்கள் அனைத்தையும் திரட்டி, 100-க்கும் மேற்பட்ட நூல்களாகத் தொகுத்து அதனை நான் வெளியிட வேண்டும் என்று என்னைச் சந்தித்து இளவழகனார் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். 2019-ஆம் ஆண்டு கலைஞர் அரங்கத்தில் நடந்த விழாவில் நான் அதனை வெளியிட்டேன்.

''தந்தை பெரியார், மறைமலையடிகள், பாவாணர், அண்ணா, பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டு இயங்கி வரும் இளவழகனார் அவர்கள் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தாலே மலைப்பாக இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழுக்காக பணியாற்றிய அனைத்துத் தமிழறிஞர்கள் புத்தகங்களையும் மொத்தமாக வெளியிட்டு இருக்கிறார் இளவழகன். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது. பத்துப் பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய பணி இது. அதனை ஒற்றை மனிதராக இருந்து செய்திருக்கிறார் என்றால் இளவழகன் அவர்களை ஒரு தமிழ்ப்பல்கலைக் கழகம் என்று சொல்லலாம். இது ஏதோ அவரை புகழ்வதற்காகச் சொல்லும் வார்த்தைகள் அல்ல.

ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் எழுதிய 2 ஆயிரம் புத்தகங்களை மூன்று லட்சம் பக்கங்களுக்குப் பதிப்பித்துள்ள இளவழகனார் அவர்களைத் தமிழின் சொத்து என்று பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்." என்று நான் அந்த விழாவில் குறிப்பிட்டேன். அத்தகைய தமிழின் சொத்தாக இருந்த இளவழகனார் அவர்கள் மறைந்துவிட்டார்கள்.

1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பள்ளி மாணவனாகக் கலந்து கொண்டு கைதாகி 48 நாட்கள் சிறையில் இருந்தவர் இளவழகனார் அவர்கள். உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிக் காலம் வரை தமிழ் நூல்களைப் பதிப்பதிலேயே குறிக்கோளாக இருந்த மாற்றுச் சிந்தனையற்ற மகத்தான மனிதரை இழந்திருக்கிறோம். அவருக்கு எனது ஆழமான அஞ்சலி!

பெரியவர் இளவழகனார் குடும்பத்தினருக்கும், அவர் மறைவால் வாடும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் திராவிட இயக்க ஆதரவாளர்களுக்கும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories