மு.க.ஸ்டாலின்

"கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

"கொரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

"கொரோனா பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"கொரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துக் கொள்கிறேன்.

கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருக்கிறது. பரவல் என்பது, முதல் அலையை விடக் கூடுதலாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தத் துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும்.

அதிலும் குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான மரணங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல, அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்.

இதனை மனதில் கொண்டு தமிழக அரசின் சார்பில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் வரும் 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் ஐம்பது விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படும். பேருந்துப் போக்குவரத்தும் ஐம்பது விழுக்காடு பயணிகளுடன் இயங்கும். பயணிகள், இச்சூழலில், பேருந்துப் போக்குவரத்தைக் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கூட்டமாக நிற்பது, நெருங்கி நிற்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கலாம். மருந்து, பால் போன்ற அத்தியாவசியப் பொருள் வழங்கல் இதனுள் வராது. உணவகங்களில் வாங்கிச் செல்லுதல் சேவை மட்டும் இருக்கிறது. இது தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் விரிவான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளை மீறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காகப் போடப்படுபவை தான் என்பதை மக்களே உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் சங்கிலியைத் துண்டிக்காமல் கொரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியைத் துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல் இருப்பது என்பது, வேகமான கொரோனா பரவலுக்குக் காரணமாக அமைந்துவிடும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் மட்டுமே, நம் பாதுகாப்பை உறுதி செய்திட இயலும்.

நோய்ப் பரவாமல் தடுத்தல் - நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும்.

அவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கவும். அப்படியே வெளியில் வந்தாலும் முகக்கவசம் அணியவும்; மூக்கையும் வாயையும் மூடியிருப்பது போல முகக்கவசம் அணிவது அவசியம். பேசுகிறபோதும் பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது அவசியம். கிருமி நாசினி திரவங்களை அடிக்கடி பயன்படுத்தவும். கபசுரக் குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்தக் காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories