தமிழ்நாடு

“காப்பீடு ரத்து : கைதட்டி முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய அரசே கைவிரிக்கலாமா?" - சு.வெங்கடேசன் கேள்வி!

கை தட்டி முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய அரசே கைவிரிக்கலாமா என மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காப்பீடு ரத்து : கைதட்டி முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய அரசே கைவிரிக்கலாமா?" -  சு.வெங்கடேசன் கேள்வி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் பேரிடரை எதிர்கொண்டு பணியாற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதியுடன் ரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், கை தட்டி முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய அரசே கைவிரிக்கலாமா என மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் பேரிடரை எதிர்கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகிவிட்டன என்கிற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வது?

அரசு மருத்துவமனைகள்- உள்ளாட்சி அமைப்புகள் - தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோருக்கான காப்பீடாகும் இது. கோவிட் இரண்டாவது அலை இந்தியா முழுக்க வீசிக் கொண்டிருக்கும் வேளையில் முன்களப் போராளிகளை இப்படியா நடத்துவது?

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷனின் மார்ச் 24-ம் தேதியிட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில் மார்ச் 24 அன்று நள்ளிரவு வரையிலான உரிம கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுமென்றும், அதற்கான உரிம கோரலை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 24 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியெனில் மார்ச் 24, 2021 நள்ளிரவுக்குப் பின் இறப்பைச் சந்தித்துள்ள விலை மதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில்? அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் தரப் போகிறோம்? இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற கோவிட் இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர், செவிலியர், ஊழியர்களுக்கு என்ன நம்பிக்கையை தரப் போகிறோம்?

இன்று நான் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதத்தில் மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன்.

1) இக்காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்

2) மார்ச் 24, 2021 நள்ளிரவுக்குப் பின்னர் உயிரை இழந்துள்ளவர்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியாக வேண்டும்.

3) இத்திட்டம் நடைமுறையாகும் போது தகுதியுள்ள உரிமங்கள் பல இழுத்தடிக்கப்படுவதாக அறிய வருகிறேன். ஆகவே இப்பயன் உரித்தானவர் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும், அனைத்து மாநில / யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

உடனடியாக இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories