தமிழ்நாடு

“உயிரே போனாலும் எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் பேட்டி!

எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம். என் உயிரே போனாலும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உயிரே போனாலும் எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நாள் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியில், செய்திப்பிரிவுத் தலைவர் ப.திருமாவேலன் அவர்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:

கேள்வி : ஸ்டாலின் என்று சொன்னாலே மிசா என்ற சொல்தான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்ப உங்களுக்கு 25 வயது இருக்குமா?

தலைவர் மு.க.ஸ்டாலின் :

என்னாலயும் மறக்க முடியாதது அது! ( காயத் தழும்பைக் காட்டுகிறார்!) இப்பவும் ஏதாவது போராட்டம் என்று சிறைக்குப் போனால் நான் காட்டும் அடையாளம் அன்றைக்கு மிசாவுல வாங்குன அடிதான்! சரியா சொல்லனும்னா எனக்கு 23 வயது. திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகியிருந்தது. 1975 ஆவது வருஷம் தான் மிசா அமல் சட்டம் அமல் ஆனது. அதனை மிகக் கடுமையாக முதல்வர் கலைஞர் அவர்கள் எதிர்த்தாங்க. மிசா அமல்படுத்தப்பட்ட அடுத்த நாளே தி.மு.க செயற்குழு கூடி கண்டனத் தீர்மானம் போட்டாங்க. கடற்கை கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பினார்கள். இந்த ஆத்திரத்துல தான் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.

கலைக்கிறதுக்கு முன்னாடி, தமிழ்நாட்டிற்கு இரண்டு தூதுவர்களை அனுப்பி வைத்தார் பிரதமர் இந்திரா அவர்கள். முதல்வர் கலைஞரைச் சந்தித்த அவர்கள், “நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எதிர்க்கக்கூடாது. எதிர்த்தால் தமிழகத்திலே உங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியை உடனடியாகக் கவிழ்ப்போம்” என்று சொன்னார்கள்.

அப்போது முதல்வர் கலைஞர் அவர்கள் சிரித்துக் கொண்டே தெளிவாகச் சொன்னார்கள்; “நான் தந்தை பெரியாராலும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவாலும் உருவாக்கப்பட்டவன். பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சிட மாட்டேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கக் கூடியவர்கள் நாங்கள். எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம். ஆட்சியல்ல; என் உயிரே போனாலும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்” என்று கூறி கலைஞர் அவர்கள், டெல்லியில் இருந்து வந்த தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள்.

“உயிரே போனாலும் எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் பேட்டி!

இதன் பிறகு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்த நிமிடம், காவல்துறை அதிகாரிகள் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகிறார்கள். இல்லத்திற்கு அவர்கள் வந்தபோது, தலைவர் கலைஞரைத் தான் கைது செய்ய வருகிறார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

“என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?” எனக் கேட்கிறார் கலைஞர்.

“இல்லை.. உங்களை இல்லை” என ஒரு அதிகாரி சொல்கிறார்.

“யாரை கைது செய்ய வேண்டும்? என அதிர்ச்சியுடன் கேட்கிறார் கலைஞர்.

“உங்கள் மகன் ஸ்டாலினை’‘ என்று கூறினார்கள் அதிகாரிகள்.

“அவன் ஊரில் இல்லையே.. நாளை மாலை வருவான்“ என்றவரிடம், “வீட்டில் இருக்கிறாரா? என்று சர்ச் செய்து பார்க்கும் படி உத்திரவு’‘ என்கிறார்கள்.

“தாராளமாகச் சர்ச் செய்யுங்கள்“ என்கிறார் கலைஞர். போலிஸார் கடமையைச் செய்தார்கள். வீட்டில் நான் இல்லை. மதுராந்தகத்தில் கழக பிரச்சார நாடகம் நடத்த நான் சென்றிருந்தேன். மறுநாள் காலையில் நான் வந்தேன்.

திருமணம் ஆகி ஐந்து மாதம் தான் ஆகி இருந்தது. மனைவிக்கு இது போன்ற காட்சிகள் புதுசு. என்ன சொல்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தார். தலைவர் அவர்கள், காவல் துறை அதிகாரிக்கு போன் செய்தார். வந்து அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்.

அரசியல் அல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் எனது மனைவி சாந்தா. அவர் இதை எதிர்கொள்ள முடியாமல் அழுதார். அப்போது''நான் ஒரு வாரத்தில் வந்துவிடுவேன்'' என்று சமாதானம் சொல்லி சமாளித்தேன். ஆனால் கலைஞர்அவர்கள் தான் ''பொதுவாழ்க்கைக்கு வந்தால் இது போன்ற துன்பங்களை தாங்கிக்கொள்ள தான் வேண்டும்'' என்று உண்மையை உடைத்து சொன்னார்.

''பொதுவாழ்க்கை என்றால் இப்படி எல்லாமும் தான் இருக்கும். ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்" என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். சென்னை மத்திய சிறையில் நான் அடைக்கப்பட்டேன். அங்கு தான் சித்திரவதை செய்யப்பட்டோம். ஒரு போலீஸ்காரர் என் முகத்தில் எட்டி உதைத்தார். ஒருத்தர் கன்னத்தில் அடித்தார். இன்னொருத்தர் லத்தியால் தோள் பட்டையில் அடித்தார். இதை பார்த்து பதறிப்போன அண்ணன் சிட்டிபாபு அவர்கள், ஓடி வந்து என் மீது படுத்து மேலும் என் மீது அடிகள் விழாதவாறு தடுத்தார். என் மீது விழ வேண்டிய அடிகள் எல்லாம் அவர் மீது விழுந்தது. அப்ப மிக முக்கியமான அச்சுறுத்தல் செய்தார்கள்.

"தி.மு.க.விலிருந்து விலகி விட்டோம், எங்களுக்கும் தி.மு.க.விற்கும் சம்மந்தம் இல்லை. என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும்” என்று மிரட்டினார்கள். என்னையே அப்படிக் கேட்டார்கள் என்றால் மற்றவர்களைக் கேட்க மாட்டார்களா? எக்காரணம் கொண்டும் மன்னிப்புக் கடிதம் எழுதித்தரப் போவதில்லை என்ற உறுதியோடு இருந்தேன்.

“ஒரே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் போதும். விடுதலை செய்கிறேன்” என்று அந்த அதிகாரி சொன்னார். நான் முடியாது என்றேன். “நீ அடிபட்டே சாகக் போகிறாய்” என்று மிரட்டினார். அப்போதும் முடியாது என்றேன்! “இளம் வயதில் ஏன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறாய்?” என்று அவர் ஆசை வார்த்தை கூறினார்.

அரசாங்கம் எப்ப விடுதலை செய்கிறதோ அப்ப விடுதலை செய்யட்டும் என்று சொல்லிவிட்டேன். அந்த நேரத்தில் நான் எடுத்த உறுதியான முடிவுதான் இன்றைக்கு இந்த இடத்தில் உட்கார வைக்கிறது.

சாப்பாட்டுல நிறைய உப்பை அள்ளிப் போட்டிருப்பார்கள் - வேப்பெண்ணையை ஊற்றி பிசைந்து தருவார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் சாப்பிட்டு இருக்கிறேன்!

பிரச்னைகள் வரும். அதனை தொலைநோக்குப் பார்வையோட சிந்தித்து முடிவுகள் எடுக்கனுறதை அந்தக் காலத்திலயே உணர்ந்ததிருந்தேன்!

“உயிரே போனாலும் எந்தச் சூழ்நிலையிலும் சர்வாதிகாரத்திற்கு நாங்கள் துணைபோக மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் பேட்டி!

கேள்வி : ஓராண்டு காலம் என்பது ஒரு யுகம் மாதிரி இருந்திருக்குமே?

தலைவர் மு.க.ஸ்டாலின் : அடிகள், தாக்குதல்கள் முதலில் கொஞ்ச நாள்கள் தான் இருந்தது. அதன்பிறகு சிறைக்குள் நடப்பது அனைத்தும் வெளியில் வர ஆரம்பித்ததும் சித்திரவதை குறைந்துவிட்டது.

ஒரு மாதம் கழித்து தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு எங்களைப் பார்க்க வந்தார்கள். என்னைப் பார்க்கும் போது சுற்றிலும் சிறை அதிகாரிகள் இருந்தார்கள். நான் வழக்கத்துக்கு மாறாக முழுக்கைச் சட்டை போட்டு இருந்தேன். காயம் தெரியக்கூடாது, தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று மறைத்துக் கொண்டேன்.

“அடித்தார்களாமே. உண்மையா?” என்று தலைவர் கேட்டார். இல்லை என்று தலையாட்டினேன். எனது பதற்றத்தை பார்த்து தலைவர் உணர்ந்திருப்பார். அடித்தார்கள் என்று சொல்லி இருந்தால் அன்று இரவும் அடி விழுந்திருக்கும்.

“இல்லை” என்பதுபோல் தலையாட்டினார் ஸ்டாலின். ஆனால், கண்கள் மின்னின. அவர் மட்டும் அடித்தார்கள் என்றுச் சொல்லியிருந்தால், அன்று மாலையே சிறைக்குள் இருந்த அனைவருக்கும் அடி விழுந்திருக்கும்.

சிறை பழகிவிட்டது. எந்த சூழலிலும் வாழ முடியும் என்ற பயிற்சியை எனக்குக் கொடுத்து சிறை. பல்வேறு விதமான கொள்கைவாதிகளையும் அப்போது பார்த்தேன். சிறுதுன்பம் வந்தாலும் பயந்து நடுங்கும் மனிதர்களையும் பார்த்தேன். என் மீது பட்ட அடியைத் தாங்கி உயிர்விட்ட அண்ணன் சிட்டிபாபுவை நினைக்கும் போது தான் மனம் கனக்கும்!

ஓராண்டு காலம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தேன். வீட்டுக்கு வந்தேன்னு அதை சொல்ல முடியாது. அதன் பிறகுதான் நாட்டுக்கு உழைக்கும் நேரம் அதிகம் ஆனது!

banner

Related Stories

Related Stories