தமிழ்நாடு

“தலைவர் கலைஞர் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேட்டி!

“சிறைச்சாலையை பூஞ்சோலையாகத் தான் கருதினோமே தவிர, அதனை சாதனையாகச் சொல்லிக் கொள்வது இல்லை” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தலைவர் கலைஞர் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நாள் பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியில், செய்திப்பிரிவுத் தலைவர் ப.திருமாவேலன் அவர்களுக்கு அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:

பகுதி - 01

கேள்வி : தலைவர் கலைஞரின் குடும்பத்துக்கு சிறைச்சாலையும் ஒரு வீடு தானோ?

தலைவர் மு.க.ஸ்டாலின் : உண்மை தான். நான் கைக்குழந்தையாக இருக்கும் போது மும்முனைப் போராட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகமே எழுதி இருக்கிறார். கைக்குழந்தையான என்னை தயாளு அம்மா தான் சிறைக்கு கொண்டு போய் காண்பித்தார்கள். விலைவாசிப் போராட்டத்தில் சிறை சில மாதங்கள் இருந்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தூண்டி விட்டதாக பாளை தனிமைச் சிறையில் கலைஞர் அவர்கள் அடைக்கப்பட்டார்கள். தேசப்பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டார்கள். மிசாவில் நான் ஓராண்டு சிறையில் இருந்தேன். திரு.முரசொலி மாறன் அவர்களும் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார்கள். எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தான் உதயநிதி பிறந்த நேரம். சிறையில் இருந்து உதயை வாழ்த்தி கலைஞர் கடிதம் எழுதினார்கள். அதன்பிறகு பதினான்கு முறை சிறை சென்றுள்ளேன்.

இதன் உச்சம் தான் கலைஞர் அவர்களை 2001 ஆம் ஆண்டு நள்ளிரவில் வீட்டை உடைத்து வந்து, அவரது படுக்கை அறைக்குச் சென்று கழுத்தை பிடித்து தூக்கி வந்த கொடுமையை அன்றைய ஜெயலலிதா போலீஸ் செய்தது.அப்போது நான் பெங்களூரில் இருந்தேன். என்னையும் கைது செய்தார் ஜெயலலிதா.

இப்படி பல்வேறு முறை சிறை சென்ற குடும்பம் தான் கலைஞரின் குடும்பம். ''மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" - என்று பாரதிதாசன் அவர்கள் எழுதினார்கள். அப்படி சிறைச்சாலையை பூஞ்சோலையாகத் தான் கருதினோமே தவிர, அதனை சாதனையாகச் சொல்லிக் கொள்வது இல்லை!

“தலைவர் கலைஞர் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன?”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சுவாரஸ்ய பேட்டி!

கேள்வி : தலைவர் கலைஞர் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது?

தலைவர் பதில் : அவர் எனக்கு எடுத்த அரசியல் பாடங்கள் எத்தனையோ நினைவுக்கு வந்தாலும், அனைவருக்கும் பொறுத்தமான ஒரு அறிவுரையை நான் சொல்கிறேன்! 2003 ஆம் ஆண்டு விழுப்புரம் மண்டல மாநாட்டுக்கு நான் தலைமை வகித்தேன். அதுதான் நான் தலைமை வகிக்கும்முதல் மாநாடு.

இரண்டு நாள் மாநாட்டில் எல்லோரும் என்னை புகழ்ந்து பேசினார்கள். இறுதியாக பேசிய தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அறிவுரை சொல்லி பேசினார். ''நான் எனது 26வது வயதிலே ஒரு மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு பெற்றேன். ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு 50வது வயதில் தான் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு தாமதமாக கிடைப்பதற்கு காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதை விட தாமதமாக கிடைத்தால் தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்கு சேர்ந்திருக்கிறது'' என்று குறிப்பிட்ட கலைஞர்” எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக உன்னை கருதிக் கொண்டு நீ நடைபோட்டு விடக்கூடாது. எங்கிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அதை தெரிந்துகொண்டு எங்கும் அங்கீகாரத்தை பெற வேண்டும் அணுகுமுறையை நீ கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். எனது இதயத்தில் கல்வெட்டில் நான் எழுதிவைத்திருக்கின்ற அரசியல் பாடம் இது!” என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories