தமிழ்நாடு

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

பிரதமர் என்பதை மறந்து ஒரு நாலாந்தரப் பேச்சாளரை விட மோசமான முறையில் பேசி இருக்கிறார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"தோல்வி பயத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கருத்துக் கணிப்புகளை வெளியிடும் ஊடகங்களை மிரட்டியுள்ள பழனிசாமி கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது" எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று (31-03-2021), தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, பழனியில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நீங்கள் எல்லாம் தந்திருக்கும் இந்தச் சிறப்பான, உற்சாகமான, இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி, நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு, வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அன்பிற்கினிய இ.பெரியசாமி அவர்கள், நம்முடைய கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர். அவர் ஏற்கனவே ஆத்தூர் தொகுதியில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தத் தொகுதி மக்களுக்காக, மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர், பணியாற்றியவர். அவர் அமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதும் - இரண்டையும் ஒன்றாகக் கருதிப் பாடுபட்டுப் பணியாற்றியவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் வெள்ளை தாடி வைத்திருக்கிறார். அவருடைய வெள்ளை உள்ளத்திற்கு உதாரணம்தான், அந்த வெள்ளை தாடி. எனவே அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தரவேண்டும்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சக்கரபாணி அவர்கள், அந்தத் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு வென்றவர். இப்போது ஆறாவது முறையும் அவரை நம்முடைய கழக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். எனவே அவருக்கும் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

பழனி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் அவர்கள், அவரும் கடந்த முறை இந்த பழனி தொகுதியில் நின்று, வென்று சட்டமன்றத்திற்குச் சென்று உங்களுக்காகக் குரல் கொடுத்த இளைஞர். அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றவராக விளங்கிக் கொண்டிருப்பவர். எனவே அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

அதேபோல, நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மக்கள் விடுதலை கட்சியின் வேட்பாளராக, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக இருக்கும் அருமைச் சகோதரர் முருகவேல் ராஜன் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர், போராடுபவர், வாதாடுபவர். அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தேடித்தர வேண்டும்.

அதேபோல திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் ஆதரவு தந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தத் திண்டுக்கல்லுக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார், திண்டுக்கல் சீனிவாசன். அவர் ஒரு காமெடி அமைச்சர். அவரால் நாட்டுக்கு இரண்டு உண்மை வெளிவந்தது. முதலாவது உண்மை, ‘அம்மா இட்லி சாப்பிட்டார்கள். அம்மா சட்னி சாப்பிட்டார்கள்’ என்று சொன்னதெல்லாம் பொய் என்பதை திண்டுக்கல் சீனிவாசன்தான் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார். "நாங்கள் பொய் சொன்னோம்" என்று பொதுக் கூட்டத்திலேயே அவர் ஒத்துக் கொண்டார்.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இரண்டாவது உண்மை, "சசிகலா குடும்பம் அம்மாவைப் பயன்படுத்தி கோடி கோடியாககக் கொள்ளை அடித்து விட்டது" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இந்த இரண்டு உண்மையைச் சொன்னதற்காக அவரை நாம் பாராட்டலாம். மற்றபடி இந்தத் தொகுதிக்கும், இந்த மாவட்டத்திற்கும் அவரால் எந்தப் பயனும் இல்லை.

நமது அமைச்சரவையில் திண்டுக்கல்லுக்கு ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தார். அப்போது இந்தத் திண்டுக்கலுக்கு எவ்வளவு பெருமைகளை, சிறப்புகளைச் சேர்த்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் அவர் பெயருக்கு மட்டும்தான் திண்டுக்கல் சீனிவாசன். இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு எதையும் செய்யாத சீனிவாசனாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் இந்த அமைச்சர். ஒன்றுமே செய்யவில்லை. அதில் நான் சிலவற்றை மட்டும் உங்களுக்கு அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

இந்த திண்டுக்கல்லை மாநகராட்சியாக அறிவித்தார்கள். ஆனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏதாவது நிதி ஒதுக்கினார்களா? "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தில் திண்டுக்கல்லைச் சேர்த்தார்கள். அந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஏதாவது பணிகள் செய்தார்களா? திண்டுக்கல் மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்தார்களா? திண்டுக்கல் - பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டப்பட்டதா? திண்டுக்கல் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்தார்களா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டதா? திண்டுக்கல் பகுதியில் இருக்கும் 11 குளங்களில் 3 குளங்களில் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. மீதிக் குளங்கள் அனைத்தும் சாக்கடை நீர் தேங்கி நோய் பரவும் குளமாக இருக்கிறது. அதைக் கவனித்தாரா? திண்டுக்கல் தொகுதியில், குடிமராமத்துப் பணிகள் என்ற பெயரில் பல நூறு கோடிகளை வாங்கி குடிமராமத்துப் பணிகளைச் செய்யாமல் கொள்ளையடித்தார்கள்.

அவர் அமைச்சர் என்பதை அவருக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும். அதனால் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நீங்கள் எல்லாம் சேர்ந்து ஓய்வு கொடுக்க வேண்டும். வருகின்ற 6 ஆம் தேதி அவரை நீங்கள் எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்போது தொலைக்காட்சிகளில், ஊடகங்களில், நம்மை எதிர்க்கும் ஊடகங்களில் கூட தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

முதன் முதலில் "புதிய தலைமுறை" கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அவர்கள் மிரட்டப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள். அடுத்து மாலை முரசில் வந்தது. அவர்களுக்கு எச்சரிக்கை விட்டார்கள். அதேபோல தந்தி டிவியில் வந்தது. நேற்றைக்கு இரண்டாவது நாள் கருத்துக்கணிப்பு வந்தது. அந்த டி.வி.யை மிரட்டி, அவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். இன்றைக்கு ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது.

எவ்வளவு நாள் இந்த ஆட்டம்? இன்னும் நான்கு நாட்கள்தான் இந்த ஆட்டம் ஆடப்போகிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் எந்த இடத்திற்குப் போகப்போகிறீர்கள் என்பதைப் பாருங்கள். அந்தக் கருத்துக் கணிப்புகளை நம்பி நாம் ஏமாந்து விடக்கூடாது. கருத்துக் கணிப்பு என்பது, நாம் செய்யும் பணிகளுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடியது. அதனால் இன்னும் நாம் பணியாற்ற வேண்டும்.

நான் இன்னும் உறுதியோடு சொல்கிறேன். 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும். அதற்குரிய பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். அதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். பா.ஜ.க. எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் வரவே முடியாது. அதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நிரூபித்துக் காட்டி விட்டோம். ஆனால் தப்பித்தவறிக் கூட அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வந்து விடக்கூடாது. இது ஆசை அல்ல. அது ஆபத்து என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால் கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்லாமல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாகத் தான் செயல்படுவார். அதற்கு உதாரணம், ஓ.பி.எஸ். மகன். எனவே, எவ்வாறு பா.ஜ.க.வை விரட்டினீர்களோ… அதேபோல அ.தி.மு.க.வையும் விரட்டியடிக்க வேண்டும். நாம் அவர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், பணியாற்ற வேண்டும்.

அந்த வேலையை நாம் ஒரு பக்கம் செய்து கொண்டிருக்க, இந்திய நாட்டின் பிரதமரும் அதற்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். எப்போதெல்லாம் அவர் தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ… அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜீரோ. இந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வரப்போவதில்லை, அது ஜீரோதான். அதேபோல அ.தி.மு.க.வும் ஜீரோதான்.

நேற்று பிரதமர் மோடி அவர்கள் தாராபுரம் வந்திருக்கிறார். அங்கு வந்து வெறும் பொய்யைப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார். அதாவது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தாராபுரம் பக்கத்தில்தான் இருக்கிறது பொள்ளாச்சி. அந்தப் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அவருக்குத் தெரியாதா?

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறை. அந்தக் காவல்துறையில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள். அவர் வேறு யாரும் அல்ல, அதே காவல்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஸ்பெஷல் டி.ஜி.பி.

மேலும், பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கப்போகிறோம் என்று பிரதமர் மோடி அவர்கள் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இப்போது நடக்கின்ற ஆட்சியைப் பொறுத்தவரையில் ஒரு கோமாளித்தனமான, கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன் நிறைந்திருக்கும் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கோடி கோடியாகச் செலவு செய்து, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில், ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தார்கள்.

அரசாங்கப் பணத்தில் கொடுக்கும் விளம்பரத்தில் பன்னீர்செல்வம் படம் இல்லை. வெறும் பழனிசாமியின் படம் மட்டும்தான் இருந்தது. ஆனால் அ.தி.மு.க.வின் விளம்பரத்தில் பழனிசாமி அவர்கள் பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்வார். ஏனென்றால் தோற்கப் போகிறார்கள் அல்லவா… அதனால் பன்னீர்செல்வத்தைச் சேர்த்துக் கொள்கிறார்.

அந்த விளம்பரத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருப்பது எங்கள் உள்ளத்தில் இருந்து வந்திருக்கும் வாக்குறுதிகள். உங்கள் இல்லத்திற்கு வந்து சேரும் என்று சொல்கிறார்கள்.

நான் கேட்கிறேன் 2011 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள், 2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், அவற்றில் ஏதாவது உங்கள் வீடு தேடி வந்ததா? ஆனால் இப்போது புதிதாக வாக்குறுதிகளை வழங்கி அவையெல்லாம் வீடு தேடி வரும் என்று நம் காதில் பூச் சுற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

2011 தேர்தல் அறிக்கையில், 2016 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எதையும் நிறைவேற்ற முடியாத அ.தி.மு.க. 2021 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை எவ்வாறு உங்கள் இல்லத்தில் கொண்டு சேர்க்க முடியும்.

அவர்கள் வாக்குறுதிகளை உங்கள் இல்லத்தில் சேர்க்க முடியாது. அவர்களை வேண்டுமானால் தோற்கடித்து நீங்கள் இல்லத்திற்கு அனுப்பலாமே தவிர, எந்தக் காரணத்தை கொண்டும் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை. ஒன்று, அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டும். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.

மேலும் இந்த 5 தொகுதிகளுக்காக, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், சின்னாளப்பட்டியில் ஜவுளிப் பூங்காவும், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படும். பழனி மேற்கு ஒன்றியத்தில் பச்சையாறு அணைத் திட்டம். கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, பண்ணைக்காடு ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும். திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம், தோல் பூங்கா, புறவழிச் சாலை. வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் குப்பைக் கிடங்குகள் ஊருக்கு வெளியே மாற்றப்படும். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆயக்குடி, வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை ஆகிய ஊர்களில் குளிர்பதனக் கிடங்குகள். நிலக்கோட்டையில் நறுமணத் தொழிற்சாலை மற்றும் முருங்கை மாவு தொழிற்சாலை. ஆத்தூர் தொகுதியில் அரசு வேளாண்மைக் கல்லூரி, கலை - அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி. ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் கால்நடை மருந்தகம். திண்டுக்கல் - பழனி சாலை, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் விபத்து சிகிச்சைப் பிரிவுடன் 24 மணிநேர நவீன மருத்துவமனை. ஒட்டன்சத்திரத்தில் அதிகமாக விளையும் கண்வலிக்கிழங்கிற்கு உரிய விலை தரப்படும். பரப்பலாறு அணை தூர்வாரப்படும். பரம்பிக்குளம் – ஆழியாறு குடிநீர்த் திட்டம் மூலமாக ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு குடிநீர் வழங்கப்படும்.

இவை அனைத்தும் நாம் ஆட்சிக்கு ஐந்து வருடத்தில் செய்வதில் சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் 'ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள்' என்ற தலைப்பில் அறிவித்துள்ளேன்.

அவை அனைத்தும் நிறைவேற நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அதேபோல, தமிழ்நாடு முழுமைக்குமான முதலமைச்சர் வேட்பாளராக நான் நிற்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்.

எனவே வெற்றியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு மத்தியில் மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. அரசு, அதற்கு அடிமையாக இருக்கும் இந்த மாநில அரசைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்து, தமிழை ஒழித்து, நம்முடைய தமிழ்ப் பிள்ளைகள் மருத்துவக்கல்வி பெறக்கூடாது என்ற ஓரவஞ்சனையோடு நீட் தேர்வைக் கொண்டு வந்து நுழைத்து, மதவெறியைத் தூண்டி, கலாச்சாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்வது, இது திராவிட மண். தந்தை பெரியார் பிறந்த மண் - பேரறிஞர் அண்ணா பிறந்த மண் – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண், இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது.

இந்தத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமன்று. இழந்த உரிமைகளை மீட்க, இந்தத் தமிழகத்தை மீட்க நடைபெறும் தேர்தல். எனவே, நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

மடத்துக்குளத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அவர்களை, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும். அவருக்கு உங்களிடம் அறிமுகம் தேவையில்லை. காரணம், ஏற்கனவே உங்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போதே, ஏதோ பலமுறை அனுபவம் இருப்பது போல பல காரியங்களை இந்தத் தொகுதிக்காகச் செய்தவர். உங்களுக்காகச் சட்டமன்றத்தில் போராடியவர் வாதாடியவர். எல்லோரிடத்திலும் அன்போடு, பாசத்தோடு பழகுபவர். எனவேதான் உங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையாக இருக்கும் நம்முடைய ஜெயராமகிருஷ்ணன் அவர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவரை நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதேபோல உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளர், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் மதிப்பிற்குரிய தென்னரசு அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும். அவர் ஒரு அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுபவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இந்த மாவட்டத்தில் தலைவராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல், உடுமலைப்பேட்டையில் இருக்கும் மக்களுக்குப் பணியாற்ற உறுதி எடுத்துக்கொண்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

அதேபோல வால்பாறை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும். அவர் தொழிற்சங்கத்திற்காக, மக்களுக்காகத் தொடர்ந்து வாதாடுபவர், போராடுபவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருந்து அந்த கட்சிக்கு வலுச் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த வேட்பாளரான அவர்தான், இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

இந்த மூன்று தொகுதிகளின் வேட்பாளர்கள்தான், இங்கே உங்களிடத்தில் கரம் எடுத்துக் கும்பிட்டு, உங்களுடைய ஆதரவைக் கேட்டு நிற்கிறார்கள். மீண்டும் மீண்டும் கேட்கிறேன் அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு உங்களுடைய ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்திட வேண்டும்.

இந்த மாவட்டத்திற்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார், உடுமலை ராதாகிருஷ்ணன். அவரை கேபிள் ராதாகிருஷ்ணன் என்று சொன்னால்தான் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் கேபிள் ஆபரேட்டராக இருந்தவர். அமைச்சர் ஆனதற்குப் பிறகு அவருக்கு எவ்வளவு சொத்து சேர்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

அதுமட்டுமல்ல, கேபிள் கார்ப்பரேஷனின் சேர்மனாகவும் இருக்கிறார். இவர்தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 70 ரூபாய்க்கு கேபிள் கொடுப்போம் என்று சொன்னார். அவ்வாறு செய்தார்களா?

அவரைப்போல, கேபிள் கார்ப்பரேஷன் அமைச்சர் போலச் செயல்படும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி எழில். அவர்களின் வேலையே டி.வி. சேனல்களை, பேப்பர் ஊடகங்களை மிரட்டுவதுதான்.

இப்போது ஊடகங்களில் ஒரு வார காலமாக கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. புதிய தலைமுறை டிவி, மாலை முரசு டிவி, தந்தி டிவி, இன்றைக்கு ஜூனியர் விகடன் பத்திரிகையில் வந்திருக்கிறது. எல்லாவற்றிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு அவர்கள் வெற்றி பெறப் போவதாகச் சொன்னாலும், நாம் பணியிலிருந்து என்றைக்கும் சுணங்கிட மாட்டோம். நம் நம்முடைய பணியைச் செய்து கொண்டே தான் இருப்போம். ஏனென்றால் 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது. அவ்வாறு சொல்லிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. அதைச் செயலில் காட்டவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் எதையும் எதிர்பார்க்காமல் பசியை மறந்து, உறக்கத்தை மறந்து, பணியாற்றவேண்டும்.

கால்நடைத்துறை அமைச்சராக இருக்கும் ராதாகிருஷ்ணன், அவருடைய கால்நடைத் துறையைத்தான் கவனிக்கவில்லை. அவருடைய பகுதியையாவது கவனித்தாரா? இந்த மாவட்டத்தைப் பற்றியாவது கவலைப்பட்டாரா? எதுவும் கவலைப்படவில்லை.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

நேற்று தாராபுரத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் வந்திருக்கிறார். நாம் பிரதமருக்கு மரியாதை கொடுக்கிறோம். அது வேறு. ஆனால் அவருடைய கொள்கைக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டிய தேவையில்லை. அங்கு அவர் பிரதமர் என்பதை மறந்து ஒரு நாலாந்தரப் பேச்சாளரை விட மோசமான முறையில் பேசி இருக்கிறார். அவர் நாலாந்தரப் பேச்சாளராக இறங்கிப் பேசிய காரணத்தினால், நான் நாலாந்தரப் பேச்சாளராக இறங்கிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நான் கலைஞருடைய மகன். எப்போதும் மரியாதையுடன்தான் பேசுவேன்.

கொங்கு வட்டாரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு வந்தால் எப்போதும் வள்ளுவரைக் கூப்பிட்டு விடுவார். இல்லையென்றால் அவ்வையாரை கூப்பிட்டு விடுவார். அவ்வாறுதான் கொங்கு வட்டாரத்தைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

அவர், ‘கொங்கு மக்கள் செல்வத்தைச் சேகரிப்பவர்கள், வியாபார நேர்த்தி கொண்டவர்கள், தொழில் நேர்த்தி கொண்டவர்கள், அளவிட முடியாத கருணை உள்ளம் கொண்டவர்கள், அவர்களின் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிறைய உதவிகள் செய்யும், உங்கள் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதியாக இருப்போம்’ என்று பேசியிருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… ஏழு வருடங்களாகப் பிரதமராக இருக்கிறீர்களே… அவர்களுக்கு என்ன செய்தீர்கள்? அதைப் பட்டியல் போட்டுச் சொல்லும் அருகதை, யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா…!

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு இந்தக் கொங்கு மண்டலம் பெயர் போனது என்று சொல்கிறீர்கள். அந்த வளர்ச்சிக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறீர்களா? நான் இதைப்பற்றி இந்தக் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிலரை இன்று மாலையில் கேட்டேன். அவர்கள், மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிறு, குறு தொழில் நலிந்து நாசமாகிச் சிதைந்து போய்விட்டது என்று சொன்னார்கள்.

உதவி என்ற பெயரால் எதையும் மோடி செய்யாமல் இருந்தாலே போதும், தொழில் வளர்ந்துவிடும். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் பெருந்தொழில் நிறுவனங்களும், சிறு - குறு தொழில் நிறுவனங்களும் முடங்கி விட்டன.

அதாவது 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் பொருளாதாரக் கொள்கையில் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இந்த பா.ஜ.க. அரசு கொண்டு சென்றுவிட்டது.

1,000 ரூபாய் நோட்டு செல்லாது, 500 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அவர்கள் திடீரென்று ஒரு இரவில் அறிவித்தார். அவர் அறிவித்த பிறகு ‘அற்புதமான அறிவிப்பை பிரதமர் செய்திருக்கிறார். இந்தியாவே தலைகீழாக மாறப்போகிறது. இந்திய நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் எப்படி எல்லாம் மாறப்போகிறது என்பதைப் பாருங்கள்’ என்று எல்லாப் பத்திரிகைகளையும் ஊடகங்களையும், கட்டாயப்படுத்தி எழுத வைத்தார்கள், ஒளிபரப்பினார்கள்.

ஆனால் என்ன நடந்தது? அதுவரை இருந்த தொழில்கள், அது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக இருந்தாலும், சிறு – குறு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அவை அனைத்தும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. அதாவது கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கு மயக்க ஊசி போட்டால் எப்படி இருக்கும், அதுபோலத்தான் மோடியின் பொருளாதாரக் கொள்கை அமைந்தது என்று அந்த நண்பர்கள் என்னிடத்தில் சொன்னார்கள்.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

அடுத்து ஜி.எஸ்.டி. என்று ஒரு வரியைப் போட்டார்கள். கந்துவட்டி வரி வசூலுக்கு இன்னொரு பெயர்தான் ஜி.எஸ்.டி. வரி. வரியைச் சீரமைக்க வேண்டும் என்று சொல்லி தொழில்துறையைச் சீரழித்து விட்டார்கள்.

தமிழகத்தில் பா.ஜ.க. இன்றைக்கு வேரூன்ற முடியவில்லை. அதனால் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, நடந்த எல்லா விஷயமும் பா.ஜ.க.வின் சதி என்று நன்றாகத் தெரிகிறது. அடிக்கடி பா.ஜ.க.வில் இருக்கும் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

அதேபோல பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனதும், அதற்குப் பிறகு அவருடைய வீடுகளில், அவருடைய பினாமிகள் வீடுகளில் சோதனை போட்டது. தலைமைச் செயலகம் வரை, டி.ஜி.பி. வீடு வரை சோதனை செய்தது.

சசிகலாவை முதலமைச்சர் ஆக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தியது. சசிகலா சிறைக்குப் போனதற்குப் பிறகு, பழனிசாமியையும் - தினகரனையும் பிரித்தார்கள்.

பழனிசாமியை அடிபணிய வைக்க சோதனை நடத்தினார்கள். பழனிசாமியின் சம்பந்திகள் வீட்டில், அவருடைய பினாமிகள் வீட்டில் சோதனை நடந்தது.

பின்பு பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்தார்கள். அடுத்து அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. ஒருபக்கம் சி.பி.ஐ. மறுபக்கம் வருமான வரித்துறை, இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம். இவ்வாறு அ.தி.மு.க.வின் சிறகுகளை வெட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்தார்கள். மிரண்டு சென்று அவர்களும் கூட்டணி வைத்தார்கள். எப்படியாவது நான்கைந்து இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுடைய முடிவு ஜீரோ. இப்போது நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு நிச்சயமாக ஜீரோ தான்.

எப்படி அரசியல் சதியை பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது? எப்படி சூழ்ச்சி வலை பின்னிக் கொண்டிருக்கிறது? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைச் சொன்னேன்.

நேற்று மோடி அவர்கள் தாராபுரத்தில் பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசி இருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மோடியின் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ஆட்சிதான் உத்தரப்பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நிலைமை என்ன?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் 2019-வது ஆண்டின் அறிக்கையின்படி உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59,853 நடந்திருக்கின்றன. இதுதான் இந்தியாவிலேயே முதலிடம். நான் பொத்தாம் பொதுவாகப் பேசவில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் அறிக்கையின்படி சொல்கிறேன்.

இதைவிடக் கொடுமை, நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் சம்பவம். அந்த ஊரில் 19 வயது இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து சிதைத்திருக்கிறார்கள். காவல்துறை அதை எவ்வாறு கையாண்டது? அதைப் பார்த்து நாடே சிரித்தது. அதனால் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் சார்பில் நாம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இது போன்று எவ்வளவோ இருக்கிறது. இந்த லட்சணத்தில் தி.மு.க.வைப் பற்றி விமர்சனம் செய்து பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.

உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. புரிந்துகொள்ளுங்கள். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் பல திட்டங்களை, நன்மைகளைச் செய்த ஆட்சி கலைஞர் தலைமையில் ஐந்து முறை இருந்த ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது.

“தி.மு.கவைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு என்ன அருகதை, யோக்கியதை இருக்கிறது?” : மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

அதே அடிப்படையில் தான் இப்போதும் நம்முடைய தேர்தல் அறிக்கையில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.

மேலும் இந்த 3 தொகுதிகளுக்காக, உடுமலை, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். உடுமலைப்பேட்டையில் தக்காளிச் சாறு தொழிற்சாலை. வால்பாறையில் பெய்யும் மழைநீர் சேமிக்க எடமலை நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். வால்பாறையில் புதிய பேருந்து நிலையம். அமராவதி கூட்டுறவுச் சர்க்கரை ஆலை புனரமைக்கப்படும். மாவட்டம் முழுவதும் நீர்வழிப் பாதைகளில் தடுப்பணைகள் கட்டப்படும். மலைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதிகள் பட்டா, பழங்குடியினர் சான்று வழங்கப்படும். பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நீண்ட கோரிக்கையான ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டங்கள் நிறைவேற்றப்படும். அமராவதி அணைப் பாசனத்தில் நீர் சேர்ப்பு அதிகப்படுத்த அப்பர் அமராவதி அணைக்கட்டு திட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் மற்றும் பொதுச் சேதங்களை தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமராவதி, திருமூர்த்தி அணைகள் தொடர் திட்டமாக வருடந்தோறும் வறட்சிக்காலத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு ஐந்தாண்டுகளில் நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளையும், அடுத்த பத்தாண்டுகளில் நிறைவேற்றுவதாக திருச்சிப் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள்’ என்ற தொலைநோக்குத் திட்டங்களையும் நிறைவேற்ற, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நீங்கள் எல்லாம் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories