தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க அரசு, சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.க-வினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளுங்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யும்போது தி.மு.கவினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்யும்போது அவர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்திருப்பதை தேர்தல் அதிகாரிகளுக்கும், நீலாங்கரை காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பணப்பட்டுவாடா செய்த இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும் அ.தி.மு.க பகுதி இணை செயலாளர் சரஸ்வதி வீட்டில் பணம் வைத்துள்ளதாகவும் அந்த வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என தி.மு.கவினர் அப்பகுதியில் குவிந்து போலிஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வருமான வரித்துறை அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.








