தமிழ்நாடு

“லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் ஒரு வேலையும் நடக்காதா?” - அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் குட்டு!

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

“லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் ஒரு வேலையும் நடக்காதா?” - அ.தி.மு.க அரசுக்கு ஐகோர்ட் குட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் சேவைகளை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையால் முடக்கப்பட்ட 48 லட்சம் ரூபாயை விடுவிக்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முடக்கப்பட்ட 48 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததன் மூலம் சம்பாதித்தது அல்ல என்றும், நிலம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது என்பதால் அந்தத் தொகையை முடக்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், சொத்து முடக்கப்பட்டு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிவடையாமல் வழக்கு நிலுவையில் உள்ளதால், சொத்துக்களை விடுவிக்க உத்தரவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி, 13 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கிய 48 லட்சம் ரூபாயை விடுவிக்க மறுத்து, ராஜேஷ்வரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது, ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே வீழ்த்திவிடும் என்றும், இது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலத்திற்கு ஊழல் வழக்குகள் நிலுவையில் வைத்திருப்பதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக்கூடும் என்றும், ஊழல் வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை அரசுத் தரப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி, ஊழலைக் கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories