தமிழ்நாடு

கணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

தனியாக இருக்கும் பெண் அதிகாரியின் வாழ்க்கையில் விளையாடலாம் என்று கருதி ராஜேஷ் தாஸ் இந்தப் படுபாதகச் செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கணவன் மனைவியை பிரிக்க நினைத்த சிறப்பு டி.ஜி.பி : வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று தமிழக பணிக்கு நியமிக்கப்பட்டார். திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றினார். 2002ம் ஆண்டு எஸ்.பி.யாக திருவள்ளூரில் பணியாற்றியபோது காவலர் ஒருவரை பெல்டால் அடித்ததற்காக மனிதஉரிமை ஆணையத்தால் ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாவட்டத்தில், பெண் டி.எஸ்.பி. ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கொடுக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தென்மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றியபோது கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல், முல்லைப் பெரியாறு போராட்டத்தின்போது தாக்குதல் என்று அவர்மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவரைத்தான் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக நியமித்தது. பின்னர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றவுடன், சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவருக்காக இந்தப் பதவி உருவாக்கப்பட்டது. இதனால் திரிபாதிக்கு இணையாக மாநிலம் முழுவதும் அதிகாரிகளை மிரட்டத் தொடங்கியதாக புகார்கள் எழுந்தது.

இரு அதிகார மையங்கள் இருப்பதால் தமிழக போலீசார் என்ன செய்வது என்று தவித்தனர். ஆனால் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டவர் என்பதால் ராஜேஷ்தாசே முழு அதிகாரத்துடன் வலம் வந்தார். அந்த அதிகாரம்தான் அவரை தவறு செய்யவைத்துள்ளது. மேலும் 3 பெண்ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தவறாகப் பேசியுள்ளார். அவர்கள் அவரிடம் கோபமாகப் பேசியதும் அமைதியாகியுள்ளார். தற்போது பாதிக்கப்பட்டவர் மிகவும் அமைதியானவர் என்பதால் தன்னுடைய வேலையை அவரிடம்காட்டியுள்ளார் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

தமிழகத்தில் 2002ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய ரவீந்திரநாத் மீதும், பெண் அதிகாரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 4 மாதமே டி.ஜி.பி.யாக இருந்த ரவீந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்தார். சட்டம் ஒழுங்கு பணியில் இருந்த ஒரு டி.ஜி.பி. சஸ்பெண்ட் ஆவது இதுதான் முதல் முறை. இப்போது சிறப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சஸ்பெண்ட் ஆவதும் முதல்முறைதான்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தமிழகத்தில் பணியாற்றுகிறார். அவரது கணவரோ, ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதனால், அவர் புதுவை மாநிலத்தில் பணியாற்றினார். இப்போது டெல்லியில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியாக பிரிந்து வசிப்பதால், ஒரே மாநிலத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இருவரும் சேர்ந்து மனு கொடுத்துள்ளனர். அப்போது, இருவரும் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இரு அதிகாரிகளும் வேண்டாம். தமிழகம் அல்லது பக்கத்து மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் இருவரையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி மோடி உத்தரவிட்டுள்ளார். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இருப்பதற்காக இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஆனால், சிறப்பு டி.ஜி.பி.யோ கணவன், மனைவி பிரிந்து வசிக்கின்றனர். இதனால் தனியாக இருக்கும் பெண் அதிகாரியின் வாழ்க்கையில் விளையாடலாம் என்று கருதி இந்தப் படுபாதகச் செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: தினகரன்

banner

Related Stories

Related Stories