
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியைச் சேர்ந்தவர் டி.வி.மணி. இவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், இவர் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினியிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை மீது பணமோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையும், நானும் நீண்ட கால நண்பர்கள். கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி இன்பதுரை என்னிடம் 40 லட்சம் ரூபாய் கடனாகக் கேட்டார். இதையடுத்து இன்பதுரையின், சென்னை உயர்நீதிமன்ற இந்தியன் வங்கிக் கிளை கணக்கில், எனது மகனின் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை செலுத்தினேன்.
பின்னர், இந்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது இன்பதுரை தரவில்லை. மேலும் அரவது அடியாட்களை வைத்து தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். இது பற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எம்.எல்.ஏவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை நண்பரிடமே பணமோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் நெல்லை பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.








