தமிழ்நாடு

“கஜானாவை அழித்து துடைத்துவிட்டு சத்தமில்லாமல் வெளியே செல்லப்போகும் எடப்பாடி பழனிசாமி” - தினகரன் தலையங்கம்

மிகப்பெரிய நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிப்பதை இந்த இடைக்கால பட்ஜெட்டின் ஒவ்வொரு வரிகளும் உணர்த்துகிறது. 

“கஜானாவை அழித்து துடைத்துவிட்டு சத்தமில்லாமல் வெளியே செல்லப்போகும் எடப்பாடி பழனிசாமி” - தினகரன் தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அதிமுக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை குறித்து கடன் சுமை என்ற தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

“தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். வழக்கம் போல தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் தாள முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். வரும் மார்ச் மாதம் 31ம்தேதி, தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.4.85லட்சம் கோடியாகவும், 2022 மார்ச் மாதம் ரூ.5.70 லட்சம் கோடியாகவும் இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி கடன் தமிழக மக்களின் தலையில் சுமத்தப்பட உள்ளது. அத்தனையும் செய்து முடித்து விட்டு, தமிழக கஜானாவை சுத்தமாக வழித்து துடைத்து விட்டு சத்தமில்லாமல் வெளியே செல்லப்போகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. 2011ல் தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன்சுமை ரூ.45 ஆயிரம் கோடி மட்டுமே. அதற்கே அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டார்.

அதன்பின் வந்த அ.தி.மு.க. ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.3.55 லட்சம் கோடி கடனை வாங்கி தமிழகம் தலைநிமிர முடியாமல் செய்து இருக்கிறார்கள். மிகப்பெரிய நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிப்பதை இந்த இடைக்கால பட்ஜெட்டின் ஒவ்வொரு வரிகளும் உணர்த்துகிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற வேண்டிய நிதியை பெறமுடியவில்லை. வரி வருவாயில் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கும் தமிழகத்தின் பங்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்கு வரவில்லை. பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் அத்தனை பாரபட்சம். பதவியை காப்பாற்றிக்கொள்ள தமிழக நலன் ஒட்டுமொத்தமாக மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டு இருப்பது இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு எத்தனை தூரம் ஒதுக்கி, வேடிக்கை பார்த்து இருக்கிறது என்பதும் புரிகிறது. தொழில் உற்பத்தி வருவாய் சரிவு, வரி வருவாய் சரிவு, மத்திய அரசு தரவேண்டிய நிதி வருவாய் சரிவு என்று மொத்தத்தில் தமிழகத்தின் வளர்ச்சியே சரிக்கப்பட்டு இருக்கிறது.

வாங்கிய கடனுக்கு கட்டவேண்டிய வட்டித் தொகையே பெருந்தொகையாக முதலில் கண்முன்வந்து நிற்கும் என்பது எத்தனை அபாயம். நிதித்துறை செயலாளராக முன்பு முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் இருந்தார். இப்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், கூடுதல் தலைமை செயலாளருமான கிருஷ்ணன் கவனித்து வருகிறார். இவர்கள் இருவருமா தமிழக அரசை எச்சரிக்கவில்லை. அதை மீறியா இத்தனை கடன் வாங்கப்பட்டுள்ளது?. யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத அளவுக்கு கடன் வாங்கி, அதை தமிழக மக்களின் தலையில் சுமத்தி விட்டு என்ன செய்யப்போகிறார்கள்? தமிழகத்தின் எதிர்காலம் ஏக்கமாய் காத்து நிற்கிறது.”

banner

Related Stories

Related Stories