தமிழ்நாடு

“எடப்பாடி அரசின் பயிர்க் கடன் ரத்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை” : அன்புதாசன் சாடல்!

பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயனில்லை என டாக்டர் அம்பேத்கர் விவசாய-தொழிலாளர்கள் சங்கத் தலைவர் அன்புதாசன் தெரிவித்துள்ளார்.

“எடப்பாடி அரசின் பயிர்க் கடன் ரத்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை” : அன்புதாசன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பால் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயனில்லை என டாக்டர் அம்பேத்கர் விவசாய-தொழிலாளர்கள் சங்கத் தலைவர் அன்புதாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவு சங்க பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது ஒரு மோசடியான அறிவிப்பு. 12,110 கோடி என்பது முழுக்க முழுக்க பெரு முதலாளிகள், அதிகார வர்க்கத்துக்கு பயன்படும் அறிவிப்பு தான். இந்த அறிவிப்பால், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறு விவசாயிகளுக்கு எந்தவொரு லாபமும் கிடையாது.

குறிப்பாக, சிறு விவசாயிகளுக்கு யாரும் வங்கிகளிலேயோ, கூட்டுறவு வங்கியிலேயோ கடன் கொடுப்பது கிடையாது. நகைகளை வைத்தால் மட்டுமே கடன் கொடுக்கின்றனர். ஆனால், பெருமுதலாளிகள் 100 ஏக்கர், 200 ஏக்கர் நிலங்கள் வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த சலுகை போய் சேருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் தாட்கோவில் கடன் வாங்குகின்றனர். கல்விக் கடன் வாங்குகின்றனர்.

இதையெல்லாம் தள்ளுபடி செய்வது கிடையாது. ஆனால், கலைஞர் ஆட்சியில் தான் கூட்டுறவு வங்கிகளில் அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், இந்த ஆட்சியில், சிறு விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் கடன் தராமல் விரட்டி அடிக்கின்றனர். அவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கடன் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், சிறு விவசாயிகள் பலரும் தனியார் வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

“எடப்பாடி அரசின் பயிர்க் கடன் ரத்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை” : அன்புதாசன் சாடல்!

கூட்டுறவு வங்கிகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெரு முதலாளிகளுக்கு எளிதாக கடன் தருகின்றனர். அவர்கள் கடனுக்கு வட்டி தராவிட்டாலும் அவர்களை எதுவும் கேட்பதில்லை. ஆனால், நகைக் கடன் வாங்கிய சிறு விவசாயிகளை மாதம் பிறந்தவுடன் வட்டி கட்டச் சொல்லி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தொந்தரவு செய்கின்றனர். தற்போது கடன் தள்ளுபடியால் பலன் அனுபவிக்கும் பலரும் ஆளும் கட்சிக்காரர்களாக தான் இருக்கின்றனர். அவர்கள் தரிசாக கிடக்கும் நிலங்களை கணக்கு காட்டி விவசாய கடன் பெற்றுள்ளனர். அவர்களுக்குத்தான் தற்போது அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியால் பயன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொல்ல வந்த விவசாய தலைவர்களில் ஒருவர் 1,000 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அவர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர். அவரை போன்றவர்களுக்கு மட்டும் தான் பயன் தந்துள்ளது. சிறு-குறு விவசாயிகள் முதல்வர் எடப்பாடியை யாரும் வந்து சந்திக்கவில்லை. பெரும் நில உடைமைதாரர்களுக்கு பயன்தரக்கூடிய சலுகை, 16 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு பயன்தரும் என்று அறிவித்ததே போலியானது.

தமிழத்தில் வட மாவட்டத்தை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும். ஒரு ஏக்கர், 2 ஏக்கர் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் எந்த விவசாயும் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களில் சிலர் வெறும் ஆயிரங்களில் தான் கடன் வாங்கி இருப்பார்கள். எந்த சிறு விவசாயிகளும் லட்சத்தில், கோடிகளில் கடன் வாங்க மாட்டார்கள். எனவே, இதை ஒரு பெருமுதலாளிகளுக்கான அறிவிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்.

கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகம் பேர் பயன்பெறுகின்றனர். டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் உள்ளனர். அப்படியிருக்கும் போது சேலம் மாவட்டத்தில் மட்டும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தள்ளுபடியால் பயன்பெறுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூட்டறவு வங்கிகளில் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்பெறுகின்றனர்.

“எடப்பாடி அரசின் பயிர்க் கடன் ரத்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு எந்தப் பயனுமில்லை” : அன்புதாசன் சாடல்!

இந்த அறிவிப்பும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, விவசாயிகள், கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் சொல்லெண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தனர். பலருக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அப்போதெல்லாம் அரசு விவசாயிகளின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்கவில்லை. ஆனால், அவர்களிடம் கூட்டுறவு வங்கிகள் கடனை திருப்பித் தர நெருக்கடி கொடுத்தனர். இதனால், பலர் சொத்துகளை அடமானம் வைத்து இந்தக் கடனை அடைத்து விட்டனர்.

வங்கிகள், கூட்டுறவு வங்கிக் கடன் சலுகை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுமையாக போய் சேருவதில்லை. இந்த வங்கிகளில் கடன் வாங்கித்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பெற்றார்கள் என்று அரசால் சொல்ல முடியும் என்றால் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தாழ்த்தப்பட்ட விவசாய கடன் மட்டுமின்றி அவர்களுக்கான கல்வி சலுகை கூட கிடைக்கவில்லை.

குறிப்பாக, ஆண்டுக்கு 20 பேர் முதல் 30 பேர் வரை அயல்நாட்டுக்கு கல்வி கற்க அரசு செலவில் அனுப்புவார்கள். ஆனால், இந்த 5 ஆண்டுகாலத்தில் ஒருவரைக் கூட எடப்பாடி அரசு அனுப்பவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் வட்டிக்கு, வட்டி போட்டு இப்போது பல லட்சம் வரை வங்கிக் கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு மத்திய அரசின் சிறப்பு நிதி கூட முழுமையாக போய் கிடைப்பதில்லை. இந்த ஐந்து ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் விவசாய கடன் மட்டுமின்றி மாணவர்களுக்கான கல்வி சலுகை கூட கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories