தமிழ்நாடு

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் எனது ஆட்சிக் காலம் அமையும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் இன்னும் ஏன் விடுதலை செய்யவில்லை என்று தி.மு.க. கேட்பதை, ஆதாயத்திற்காகக் கேட்பதாக முதலமைச்சர் பழனிசாமி சொல்வது அழகல்ல”

“பெருந்தலைவர் காமராசர் காலத்து கல்வி வளத்தையும், பேரறிஞர் அண்ணா காலத்து மாநில உரிமையையும், முத்தமிழறிஞர் கலைஞர் காலத்து நலத்திட்டங்களையும் - மேம்பாட்டுப் பணிகளையும் தமிழகத்துக்கு வழங்கும் காலமாக எனது ஆட்சிக் காலம் அமையும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (04-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

இந்த அரங்கத்திற்குள் நீங்களெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கிறீர்கள். இங்கு வந்திருக்கும் உங்களை எல்லாம் இராமநாதபுரம் மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மட்டுமின்றி - தலைமைக் கழகத்தின் சார்பிலும் - என்னுடைய சார்பிலும் வருக… வருக… வருக… என முதலில் நான் வரவேற்கிறேன்.

ஸ்டாலினிடத்தில் சொன்னால் - நமது மனுக்களைக் கொடுத்தால், ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் நிறைவேற்றி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த நம்பிக்கையை மனதில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

நீங்கள் இந்த அரங்கத்திற்குள் வருவதற்கு முன்னால் நுழைவாயிலில் நீங்கள் வந்ததற்கான அடையாளத்திற்காகப் பதிவு செய்திருப்பார்கள். அப்போது உங்களுக்கு ஒரு ரசீது கொடுத்திருப்பார்கள். யாராவது பதிவு செய்யாமல் வந்திருந்தால் தயவுசெய்து கூட்டம் முடிந்து வெளியில் செல்லும் போது அங்கு நமது தொண்டர்கள் - இளைஞர்கள் எல்லாம் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களிடம் பதிவு செய்துவிட்டு அதற்குப் பிறகு ரசீதை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஏன் இவ்வாறு அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன் என்றால் அதுதான் உங்களுக்கு ஒரு அத்தாட்சி. அது இருந்தால் உரிமையோடு கோட்டைக்கு வந்து முதலமைச்சர் அறையில் உட்கார்ந்து இருக்கும் இந்த ஸ்டாலினைப் பார்த்து நீங்கள் கேள்வி கேட்க முடியும்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

உங்கள் பிரச்சினைகளைச் சொல்வதற்காக வரவேண்டும் என்று நான் சொன்னபோது, மாநாட்டுக்கு வந்திருப்பதுபோல பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் இருக்கிறது. அதே போல் எனக்கும் இருக்கிறது. ஆனால் எல்லோரையும் பேச வைத்தால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் எல்லோரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை.

நான் பல மாவட்டங்களுக்குச் சென்று வந்தேன். எல்லா மாவட்டங்களிலும் கட்டுப்பாடாக இருந்தார்கள். எல்லா மாவட்டங்களையும் விஞ்சும் அளவிற்கு இந்த இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது.

இதே கட்டுப்பாடு இந்தக் கூட்டம் முடியும் வரை இருக்க வேண்டும். இங்கே 10 பேரைப் பேச வைக்கப்போகிறோம். நீங்கள் கொடுத்த மனுக்கள் - கோரிக்கைகள் எல்லாம் இந்தப் பெட்டியில் இருக்கிறது. இதிலிருந்து 10 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். அவ்வாறு பேசுவோர் சுருக்கமாகப் பேச வேண்டும்.

இங்கு உங்கள் ஊரில் இருக்கும் பிரச்சனைகளான குடிநீர் பிரச்சினை - தெருவிளக்குப் பிரச்சினை - பேருந்து வசதி பிரச்சினை - மருத்துவமனை பிரச்சினை - முதியோர் உதவித்தொகை – ஓய்வூதியப் பிரச்சினை - வேலைவாய்ப்பு - சுகாதாரச் சீர்கேடு - 100 நாள் வேலை திட்டம் இது போன்ற அடிப்படை பிரச்சினைகளைத் தான் சொல்லப் போகிறீர்கள். அதனால் சுருக்கமாக உங்கள் கருத்துகளைப் பேச வேண்டும்.

நீங்கள் பேசியதற்கு பிறகு நான் உங்களிடத்தில் 10 நிமிடம் பேசுவேன். அதற்குப் பிறகு இறுதியாக உங்களுக்கு முன்னால் இந்தப் பெட்டியை நானே பூட்டி, அதற்கு மேல் ஒரு சீல் வைக்கப் போகிறோம். அதற்குப்பிறகு இதனை சென்னைக்குக் கொண்டு சென்று விடுவோம். அண்ணா அறிவாலயத்தில் வைத்துவிடுவோம்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நீங்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை உருவாக்கும் வகையில் நீங்கள் எல்லோரும் வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியைப் பெறப் போகிறோம். நான் 200 என்று சொல்லி இருக்கிறேன். தற்போதைய போக்கைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு வந்திருக்கிறது.

நான் ஒரு ஆணவத்தில் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். எதார்த்த நிலையைச் சொல்கிறேன். மக்களிடம் இருக்கும் உணர்வுகளைச் சொல்கிறேன். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்த அடுத்த நாள் அந்த ‘சீல்’-ஐ நான்தான் உடைப்பேன்.

இந்தப் பெட்டியின் பூட்டை நான் தான் திறப்பேன். அதிலிருக்கும் மனுக்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள் – அதிகாரிகளிடம், அதற்கென்று ஒரு தனித் துறை உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

அந்தப் பணிகளை எல்லாம் 100 நாட்களில் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. இப்போது உங்களுடைய பெயர்களை நான் இங்கு தேர்வு செய்யப் போகிறேன்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதாவது:

நம்முடைய ஆட்சி விரைவில் வரப்போகிறது. அப்போது உங்கள் பிரச்சினைகள் நிச்சயமாகத் தீரும். இப்போது இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் வந்தாலும் - புயல் அடித்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படப் போவதில்லை.

நிவர் புயல் போன்ற பல புயல்களை எல்லாம் நாம் சந்தித்தோம். ஆனால், மத்திய அரசு அதற்குக் கொடுக்க வேண்டிய நிதியை கூட இன்னும் கொடுக்காமல் இருக்கிறது. ஆனால், அதைத் தட்டிக் கேட்க இயலாத வகையில் இங்கு இருக்கும் ஒரு கையாலாகாத அரசாக பழனிசாமியின் அரசு இருக்கிறது.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மத்திய அரசுக்கு அடிபணிந்து - மண்டியிட்டு இருக்கும் ஆட்சியாகத்தான் இருக்கிறதே தவிர, தட்டிக்கேட்கும் ஆட்சியாக இல்லை. ஆனால், தி.மு.க. அப்படி இருக்காது. எதுவாக இருந்தாலும் நம்முடைய உரிமையை நாம் என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் - தட்டிக் கேட்போம். நமக்கு இருக்கும் உரிமையை நாம் நிச்சயம் பெறுவோம்.

எல்லாவற்றிலும் கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இதுதான் இந்த அரசின் கொள்கையாக இருக்கிறது. பழனிசாமியைப் பொறுத்தவரையில் ஆட்சியை நடத்துவதே கமிஷன் அடிப்பதற்காகத்தான். அது மட்டுமின்றி இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கிறது. இந்த 3 மாதங்களில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

‘சாகப் போகும் போது சங்கரா சங்கரா’ என்று சொல்வது போல என்பார்கள். அதைப் போலக் கடைசி நேரத்திலும் கூட டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் விரைவில் வரப்போகிறது. நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் இதனை சரி செய்வது மட்டுமின்றி, ஏற்கனவே இந்த 10 ஆண்டுகளில் என்னென்ன தவறு செய்தார்களோ, அவற்றுக்குரிய தண்டனையை நிச்சயமாக, உறுதியாக வழங்குவோம் என்ற நம்பிக்கையை நான் சொல்லிக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமனம் உட்பட அனைத்துப் பணி நியமனங்களும் நேர்மையான முறையில் வழங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது அவ்வாறு இல்லை. நான் உறுதியோடு சொல்லுகிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த நியமனமாக இருந்தாலும், லஞ்சம் இல்லாமல் நேர்மையான வழியில், அவை வழங்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரையில் ‘ஊனமுற்றோர்’ என்று அழைக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். அந்த வார்த்தையைச் சொல்வதற்கே கூச்சப்படுகிறேன் – வேதனைப்படுகிறேன். ஆனால் அவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அந்தச் சொல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் நிலையில் இருக்கிறது என்று தலைவர் கலைஞர் முடிவு செய்து, அவர்களுக்கு ‘மாற்றுத்திறனாளி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர்.

அது மட்டுமின்றி அவர்களுக்கு எல்லா சலுகைகளும் அரசின் சார்பில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகளைப் போட்டு அந்தத் துறையைத் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தாலும், அவரது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். அந்த அளவிற்கு அக்கறை செலுத்தி அந்த துறையை அவர் வைத்திருந்தார். நீங்கள் சொன்ன பிரச்சினைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிச்சயமாக களையப்படும் - நிவர்த்தி செய்யப்படும் என்ற அந்த நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மீனவர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இலங்கைக் கடற்படையினர் இந்த அட்டூழியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த செய்தியைக் கேள்விப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அதனைக் கண்டித்து அறிக்கை விட்டேன். ஒருவேளை கடல் எல்லை தெரியாமல் எங்களது மீனவர்கள் மீன்பிடித்திருந்தால் அதிகபட்சம் அவர்களுடைய படகுகளைக் கைப்பற்றி இருக்கலாமே தவிர, அவர்களை கொல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

அந்த கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடி ரூபாய் இலங்கை அரசிடம் பெற்றுத் தர வேண்டும் என்று இந்திய அரசிடம் வேண்டுகோள் வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது மட்டுமின்றி மகளிர் அணி செயலாளர் - நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் கனிமொழி அவர்கள் நாடாளுமன்றத்தில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் சொல்லி இருக்கிறார்கள்.

அவர்களுடைய பிள்ளைகளின் கல்விச் செலவையும் தி.மு.க.வே ஏற்கும் என்பதையும் நான் அறிவித்தேன். மீண்டும் ஒருமுறை அந்த வாக்குறுதியை அனைவரின் முன்பாகவும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பயிர்க் காப்பீட்டு தொகைகள் எங்கும் முறையாகச் சென்று சேரவில்லை. இந்த ஆண்டு பல விவசாயிகளுக்கு பொங்கல், பொங்கலாக இல்லை. துன்பப் பொங்கலாகவே அமைந்துவிட்டது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகை பற்றி நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்.

சந்தியாகு என்பவர் என்னைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை முதல் வரிசையில் உட்கார வைத்திருக்கிறோம். அவரைத் தொட்டுப் பார்த்து வந்துவிடுகிறேன். (கழகத் தலைவர் அவர்கள் கீழே இறங்கிச் சென்று சந்தியாகு அவர்களைத் தொட்டுப் பேசி, குறைகளைக் கேட்டறிந்தார்)

“நீங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள். நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றினால் போதும். இவ்வளவு நாள் நிம்மதியாகத் தூங்கவில்லை. இன்றைக்கு இரவு நிம்மதியாக தூங்குவேன்” என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இன்றைக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் எதிரில் வெறும் நாற்காலியைப் பார்த்து வீரவசனம் பேசியிருக்கிறார்.

முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி மீதும், அவருக்குக் கீழ் பணி செய்யும் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், உதயகுமார், விஜயபாஸ்கர் போன்ற பல அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் டிசம்பர் மாதம் கொடுத்திருக்கிறோம்.

2 மாதம் முடியப் போகிறது. இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஊழல் புகாரை பொத்தாம் பொதுவாக இன்றி, ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சர் பழனிசாமி, கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார். அவருடைய சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டரைக் கொடுத்ததில் முறைகேடு நடந்திருக்கிறது.

ஏற்கனவே தி.மு.கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வழக்கு நடைபெற்றது. இதில் உண்மை இருக்கிறது. இதை நாங்கள் விசாரிப்பதை விட சி.பி.ஐ. விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு முன்னால், முதலமைச்சர் பழனிசாமி, நேராக டெல்லிக்கு சென்று உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்திருக்கிறார். தைரியமிருந்தால் - எந்தவிதமான பயமும் இல்லாமல் இருந்தால் அவர் சி.பி.ஐ. விசாரணையைச் சந்திருத்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவரை நேர்மையானவர் என்று நாம் பாராட்டி இருக்கலாம். மடியில் கனம் இருக்கிறது. அதனால்தான் வழியில் பயம் இருக்கிறது. அதனால்தான் தடை வாங்கி வைத்திருக்கிறார்.

அதையெல்லாம் நாங்கள் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். அதேபோல வேலுமணி அவர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். நானும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன் தான். அதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். அவரை உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று சொல்லக்கூடாது. ஊழலாட்சித்துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு கொடுமையை அவர் செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு நம்பர் 1 ஊழல் செய்கிறவர் யார் என்றால் பழனிசசாமியை விஞ்சுகிற அளவிற்கு வேலுமணி தான் செய்துகொண்டிருக்கிறார். கொரோனா காலத்தைப் பயன்படுத்தி பிளீச்சிங் பவுடர் – துடைப்பத்தில் கொள்ளையடித்தவர் வேலுமணி தான்.

சமீபத்தில் பல்பு மாற்றினார்கள். 100 ரூபாய் பல்பை 1500 ரூபாய் பில் போட்டு வாங்கியிருப்பதை எல்லாம் ஆதாரங்களோடு ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம். அதை சட்டப்பேரவையில் உரையாற்ற வந்த ஆளுநரிடம் கேட்டோம். அவர் எங்களை உட்காருங்கள் - உட்காருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இதுதான் கடைசிக் கூட்டம் உட்காருங்கள் என்று சொன்னார். நான் உடனே வெளியே வந்து இதுதான் இந்த ஆட்சியின் கடைசிக் கூட்டம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அரசு தீவிரமாக முயற்சி எடுக்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டு ஆகிறது. இது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை இன்றைக்கு பழனிசாமி அவர்கள், தி.மு.க. இதில் ஆதாயம் தேடுகிறது என்று சொல்லியிருக்கிறார். நீங்களும்தான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆதாயத்திற்காக நிறைவேற்றி இருக்கிறீர்களா?

தீர்மானத்தை நிறைவேற்றியபோது நாங்கள் எதிர்த்தோமா? ஏன் நிறைவேற்றுகிறீர்கள் என்று கேட்டோமா? அதனை நாங்கள் வரவேற்றோம்.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இப்போது, சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 ஆண்டுகளாகியும் ஏன் ஆளுநர் விடுதலை செய்யவில்லை என்று தான் நாங்களும் கேட்கிறோம். இதையெல்லாம் மறைத்துவிட்டு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி பேசுவது அழகல்ல; மரபல்ல. நீங்கள் எவ்வளவு நாள் தான் பேசப் போகிறீர்கள் என்று பார்ப்போம். முதலமைச்சர் என்ற இடத்தில் உட்கார்ந்து பேசுவது இந்த ஆண்டு தான் உங்களுக்கு கடைசி ஆண்டு. அடுத்த சட்டமன்றக் கூட்டம் கூடும்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

2 நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் சகோதரி எழிலரசி என்றவர் பேசும் போது வீட்டில் சிலிண்டர் வெடித்து அவர்கள் இறந்துவிட்டார்கள். ஏற்கனவே ராணுவ வீரரான அப்பா இறந்து விட்டார். அம்மா இறந்ததற்கு 2 லட்சம் ரூபாயை அரசு சார்பில் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள்.

அப்போது நான் கவலைப்படாதீர்கள் - தைரியமாக இருங்கள், 100 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு உடனே தீர்வு காண்கிறேன் என்று சொன்னேன்.

அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நான் வேலூருக்கு சென்றுகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் வங்கியில் செலுத்தி விட்டதாக செய்தி கிடைத்தது. அடுத்த நாள் அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப அணி 2 மாதத்திற்கு முன்பே பணம் கொடுத்து விட்டோம். ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’ என்று தகவல் வெளியிட்டது.

அதற்குப் பிறகு அந்தப் பெண் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். ‘அவர்கள் பொய் சொல்கிறார்கள். நீங்கள் பேசிய பிறகு தான் எங்களுக்கு அந்தப் பணம் வந்தது. இதுதான் உண்மை’ என்று என்னிடம் அறிவாலயத்தில் நன்றி சொல்லிவிட்டு, அதற்கு பிறகு நம் கட்சியின் சார்பில் அந்த பெண்ணுக்கு சிறிதளவு நிதியைக் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தோம். இதுதான் நடந்தது. அதனுடைய வீடியோ காட்சி இப்போது உங்களுக்கு முன்னால் போடப்படும். அதையும் பாருங்கள்...

இவ்வாறு பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசினார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ என்பதை அரசியல் வாக்குறுதியாக மட்டுமல்ல, தனது வாழ்க்கை நெறிமுறையாகக் கொண்டு வாழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்தத் தடை ஏற்பட்டாலும் அதை உடைத்து அதனை நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர்! தவறான வாக்குறுதியை கொடுத்தவரும் அல்ல!

இப்போது நாம் பார்க்கும் தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிறுவனங்கள் எல்லாம் கழக ஆட்சியில் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை தான்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், பெண் காவலர்கள் நியமனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மனுநீதி நாள் உருவாக்கம், கைத்தறி நிதிக்கழகம், தமிழ்நாடு கைத்திறன் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கு கழகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உருது அகடாமி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல இயக்குநரகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, கடல்சார் வாரியம், சமத்துவபுரங்கள், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - இப்படி தினந்தோறும் திட்டமிட்டு தமிழகம் வளர்த்தவர் கலைஞர். திட்டங்கள் தீட்டி தமிழகம் வளர்த்தது கழக அரசு!

இத்தகைய கலைஞரை அடக்கம் செய்ய ஆறடி நிலம் ஒதுக்க மறுத்த இரக்கமற்ற அரசு தான் இந்த அ.தி.மு.க. அரசு!

தலைவரை இழந்த சோகத்தில் இருக்கும் போது, அவருக்கான உரிமையை நிலைநாட்டப் போராடவேண்டிய நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டது. இடம் தர மறுத்தால், தடையை மீறி தலைவர் கலைஞரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது என்ற முடிவோடு நான் இருந்தேன். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நினைத்தும் கவலைப்பட்டேன். தொண்டர்களுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாது, அதேநேரத்தில் நமது எண்ணமும் நிறைவேற வேண்டும் என்று யோசனையில் இருந்தேன். அப்போது நீதிமன்றத்தை நாடினோம்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. “மெரினா கடற்கரையில் ஏற்கனவே முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், திராவிட பாரம்பரியத்தின் வழித்தோன்றலுமான கலைஞர் கருணாநிதியின் உடலை அவரது அரசியல் குருவான அண்ணாவின் அருகே அடக்கம் செய்வது தான் அவருக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்" - என்று நீதியரசர்கள் அமர்வு மகத்தான தீர்ப்பை அளித்தது.

“பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் தமிழகம் அமைப்பேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

நீதிபதிகள் இத்தகைய தீர்ப்பை அளிக்கவில்லை என்றால் அன்றைய தினம் என்ன ஆகி இருக்கும்? இன்று நினைத்தாலும் பதற்றமாக இருக்கிறது!

ஊழல் குற்றச்சாட்டில் நான்காண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றவர்க்கு 80 கோடி செலவில் நினைவகம் கட்டியவர்கள் - கலைஞருக்காக ஆறடி ஒதுக்கக் கூடாது என நினைத்தது அரசியல் நயவஞ்சகம் தவிர வேறல்ல. இத்தகைய நயவஞ்சக மனிதர்களிடம் நாடு சிக்கி இருக்கிறது. அதனை மீட்டாக வேண்டும்.

கலைஞருக்கு ஆறடி நிலம் கொடுக்காத இவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?

இன்றைய முதலமைச்சர் பழனிசாமி நயவஞ்சகம் கொண்டவர். நன்றி மறந்தவர். நம்பிக்கைத் துரோகம் செய்பவர். இது நம்மை விட அ.தி.மு.க.வினருக்குத்தான் அதிகம் தெரியும். அதனால் தான் அவர் சொந்தக் கட்சிக்காரர்களால் ஒதுக்கப்பட்டு வருகிறார். நிராகரிக்கப்பட்டு வருகிறார்.

பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசியல் ரீதியாக துரத்துவது என்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை தருவதாகும். பழனிசாமியும் அ.தி.மு.க. அரசும் - விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது! சிறுபான்மைச் சமூகத்தினரின் உரிமையைப் பறித்தது! இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் முதுகெலும்பு இல்லாத அவர்களுக்கு எதற்கு ஆட்சி! ஈழத்தமிழரின் வாழ்வுரிமையை மீட்டுத்தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை!

தமிழ்நாட்டையும், ஆட்சியையும் அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. ஆட்சியிடம் அடமானம் வைத்துவிட்டு - தனக்கும் தங்கள் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் பினாமிகளுக்கும் சொத்துச் சேர்ந்தால் போதும் என்று நினைக்கும் சுயநலக் கும்பல்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து கோட்டையை மீட்கும் தேர்தல் தான் வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்.

அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க.வுக்கு கோட்டையைக் கைப்பற்றும் தேர்தல் மட்டுமல்ல இது; தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்கும் தேர்தல். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மீட்கும் தேர்தல்.

இந்த மகத்தான கடமையை நிறைவேற்றும் வாய்ப்பை காலம் எனக்கு வழங்கி இருக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். கழகம், பெரியார், அண்ணா, கலைஞர் என நான்கும்தான் எனக்கு மாதா,பிதா,குரு,தெய்வம். இதுதான் என்னை வழிநடத்துகிறது.

இவர்களது சிந்தனைப்படி, இவர்களது எண்ணப்படி, இவர்கள் காட்டிய பாதையில் தான் நான் பயணம் செய்கிறேன். இவர்கள் வழித்தடத்தில் உன்னதமான தமிழகத்தை அமைக்க நான் உறுதியேற்றுள்ளேன்.

பெருந்தலைவர் காமராசர் காலத்து கல்வி வளத்தையும், பேரறிஞர் அண்ணா காலத்து மாநில உரிமையையும், முத்தமிழறிஞர் கலைஞர் காலத்து நலத்திட்டங்களையும், மேம்பாட்டுப் பணிகளையும், தமிழகத்துக்கு வழங்கும் காலமாக எனது காலம் நிச்சயமாக, உறுதியாக அமையும். உங்களில் ஒருவன் ஆட்சி நடத்துகிறான் என்ற உணர்வை நீங்கள் பெறும் ஆட்சியாக எனது ஆட்சி அமையும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories