
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மிகப்பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த விலையிலான உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது.
அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவில், 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த டிச.21-ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த உணவுத் திருவிழா இன்றுடன் (டிச.24) முடிவடைவதாக இருந்த நிலையில், பொதுமக்களின் பேராதரவுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க - டிசம்பர் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது, “சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா - பொதுமக்களின் பேராதரவுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க - டிசம்பர் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த 21-ஆம் தேதி நாம் தொடங்கி வைத்த இந்த உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடைவதாக இருந்தது.
சுய உதவிக் குழு சகோதரிகள் சமைத்து அளிக்கும் ஆரோக்கியமான, சுவையான உணவுப் பொருட்களுக்கு பொதுமக்கள், குறிப்பாக பெண்களும் - குழந்தைகளும், அளிக்கும் வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்த உணவுத் திருவிழாவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வரும் 28ஆம் தேதி வரை நடத்துவதற்கு அறிவுறுத்தி உள்ளோம்.
அனைவரும் பயன்படுத்திக் கொள்க!”






