தமிழக அரசால் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அ.தி.மு.கவினர் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். விளைநிலம் வைத்திருப்பவர்கள், ஒரே குடும்பத்தில் இருவருக்கு ஆடுகள் வழங்கக்கூடாது என அரசு விதி இருந்தும் அதனையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.கவினர் தொடர்ந்து பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தண்ணிலப்பாடி ஊராட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு குடும்பங்களுக்கு நான்கு ஆடுகள் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆடு வழங்கும் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஆடுகள் வழங்காமல் ஒரு ஆட்டிற்கு 1,200 ரூபாய் வீதம் அ.தி.மு.கவினர் பிடித்தம் செய்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடுகள் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்மையான பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே கொன்னையூரில் அரசின் விலையில்லா ஆடுகள் வழங்குவதாகக் கூறி சுமார் 70 பேரிடம் தலா 2,000 ரூபாயை பொறுப்பாளர்கள் வசூலித்த நிகழ்வு அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பழனிசாமி தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க அரசில் மாநிலத்தின் அனைத்து பகுதியிலும் ஊழல், முறைகேடுகள், மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது என அரசியல் நோக்கர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.