தமிழ்நாடு

நடக்க இயலாத வீராவுக்காக நடைவண்டி செய்த காசி : நெகிழ்ந்துபோய் பாராட்டிய தி.மு.க தலைவர்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நெகிழ்ந்துபோய், ‘வீரா’வைப் பராமரித்து - அதற்கு சக்கர வண்டியும் செய்து கொடுத்துள்ள காசியைப் பாராட்டியுள்ளார்.

நடக்க இயலாத வீராவுக்காக நடைவண்டி செய்த காசி : நெகிழ்ந்துபோய் பாராட்டிய தி.மு.க தலைவர்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இரண்டு கால்களின் பாதங்கள் வெட்டப்பட்ட பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்றை மீட்ட கோவையைச் சேர்ந்த 'Humane Animal Society' அமைப்பினர், அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளித்து ‘வீரா’ எனப் பெயரிட்டனர்.

இரு கால்களின் பாதங்களும் வெட்டப்பட்டதால் நடப்பதில் சிரமங்களைச் சந்தித்த அந்த நாய்க்குட்டியை நடக்க வைக்க முயன்று வென்றிருக்கிறார் கோவையைச் சேர்ந்த காசி. 'Humane Animal Society'யிடமிருந்து நாய்க்குட்டியைப் பெற்ற இயந்திரப் பொறியியலாளரான காசி என்பவர், அது எளிதாக நடக்கும் வகையில் ஒரு வண்டியை உருவாக்கினார்.

அந்த வண்டியை நாய்க்குட்டி வீராவுக்கு ஏற்றபடி உருவாக்கினாலும், அதன் காலில் சிராய்ப்பு ஏற்பட்டதை உணர்ந்த அவர், அதை மேம்படுத்தும் வகையில் ஏதுவான பொருட்களைப் பயன்படுத்தி, புதிதாக நடைவண்டி ஒன்றைச் செய்துள்ளார்.

நாய்க்குட்டி வீரா, சக்கர நடை வண்டியின் உதவியுடன் பயணிக்கும் காட்சியை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இயந்திரப் பொறியியலாளரான காசி, நாய்க்குட்டி எளிதாக நடப்பதற்காக புதிய கருவி உருவாக்கியது பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதுகுறித்த காணொளியைக் கண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நெகிழ்ந்துபோய், ‘வீரா’ எனும் அந்த நாய்க்குட்டியைப் பராமரித்து - அதற்கு சக்கர வண்டியும் செய்து கொடுத்துள்ள காசியைப் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடக்க இயலாத தனது வளர்ப்புப் பிராணி வீராவுக்காக நடைவண்டியை வடிவமைத்திருக்கும் காசியின் செயல் நெகிழச் செய்கிறது.

யானை மீது எரியும் டயரை வீசுபவர்களுக்கு மத்தியில் தான் காசி போன்ற அன்புநிறை மனிதர்களும் வாழ்கிறார்கள். நன்றி காசி!

வீராவின் நடை மகிழ்ச்சி பூக்கச் செய்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories