தமிழ்நாடு

குட்கா ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

குட்கா ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சிபிஐ-யை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழ்க்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்தார்.

குட்கா ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தயாரித்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாக வழ்க்கறிஞர் என்.ரமேஷ் விளக்கம் அளித்தார்.

மேலும், ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த வழக்கில் தமிழக காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், உணவு பாதுகாப்புதுறையை சேர்ந்த இரு அதிகாரிகள், வணிக வரித்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், கலால் வரித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி என 7 அரசு ஊழியர்களும் இந்த 30 பேரில் அடங்குவர் என்றும், இவர்கள் உள்ளிட்ட பலர் அரசு ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுசதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

குறிப்பாக, 2013 மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும் அசையா சொத்துக்களை தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்த வழ்க்கறிஞர் என்.ரமேஷ். இதற்காக மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதால் 30 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் மூலம் 246 கோடியே 10 லட்ச ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் என்.ரமேஷ் வலியுறுத்தினார். இந்த ஆவணங்களை ஆராய்ந்து வரும் நீதிபதி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேருக்கும் அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்ப உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories