தமிழ்நாடு

“நாட்டின் எதிர்காலத்துக்கு தமிழ் மொழியின் பங்கு முக்கியமானது” - அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராகுல் பேச்சு!

தமிழ் கலாசாரம் மற்றும் வரலாற்றை நேரில் கண்டு களிப்பது அருமையான அனுபவமாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

“நாட்டின் எதிர்காலத்துக்கு தமிழ் மொழியின் பங்கு முக்கியமானது” - அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராகுல் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் எங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து மக்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா காலம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புகளுடனும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியை பார்வையிட தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட வந்தது பார்வையாளர்களையும், விழாக்கமிட்டியினரையும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதையடுத்து, ராகுல்காந்தியும் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில், சீறிப்பாயும் காளைகளையும் திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளையரையும் கண்டுகளித்தனர். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் இருந்தனர்.

அதன் பிறகு விழா மேடையில் பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரம் மற்றும் வரலாற்றை நேரில் கண்டு களிப்பது அருமையான அனுபவமாக உள்ளது. காளைகளையும், காளையர்களையும் அனைவரும் பொறுப்பாக கவனித்துக்கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின் எதிர்காலத்திற்கு தமிழ் கலாசாரமும், மொழியும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருதியே இங்கு வந்துள்ளேன். தமிழையும், இந்த மண்ணின் கலாசாரத்தையும் ஒதுக்கிவிடலாம் என நினைப்பவர்களுக்கான செய்தியை கொடுக்கவே வந்திருக்கிறேன்.

தமிழக மக்களிடம் இருந்து மிகுந்த அன்பையும் பாசத்தையும் பெற்றுள்ளேன். அவர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் மொழியை பாதுகாப்பது எனது கடமை.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories