தமிழ்நாடு

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர்களான நீங்கள் சாதாரண விளக்குகள் அல்ல; ஒளிவீசும் உதயசூரியன்களாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”, “அநீதி அ.தி.மு.க. ஆட்சி விரைவில் வீழும். தி.மு.க. ஆட்சியை நிலைநாட்ட கழகச் சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (10-01-2021) மாலை, சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை இரண்டாவது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியானர்.

தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்டக் கருத்தரங்கம் மற்றும் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கருத்தரங்கம் - அரசியல் கருத்தரங்கம் என்று எதற்காக பிரித்துப் போட்டீர்கள் எனத் தெரியவில்லை. நீங்கள் சட்டம் பற்றி பேசினாலே - அது அரசியலைத் தவிர்த்து விட்டு இருக்க முடியாது. எனவே, அதனைப் பிரித்துச் சொல்ல வேண்டியது இல்லை.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

'வக்கீலிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்' என்பார்கள். ஒரு வக்கீல் அல்ல, ஆயிரக்கணக்கான வக்கீல்கள் இருக்கிறீர்கள். அதனால் மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பதை அறியாதவன் அல்ல நான்! நீங்கள் சட்ட நீதியைப் பேசுபவர்கள்! நான் சமூகநீதியைப் பேசுகிறேன்!

இந்தக் காலத்தில் சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் தான் இத்தகைய கருத்தரங்கை நம்முடைய வழக்கறிஞர் அணி ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் மன்றத்தில் மட்டும் பேசிக் கொண்டு இருக்க முடியாது, நீதிமன்றங்களையும் பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போல, நீதிமன்றங்களில் மட்டுமல்ல, மக்கள் மன்றங்களிலும் பேசியாக வேண்டும் என்ற நெருக்கடி உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இத்தகைய கருத்தரங்கங்கள் ஏராளமாக நடத்தியாக வேண்டும்.

இதனை ஏற்பாடு செய்துள்ள கழக சட்டத்துறைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் அவர்களையும், சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன் அவர்களையும், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தலைமைக் கழக வழக்கறிஞர்களையும் - வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்!

பொதுவாக வாசல் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்பதைப் போல வக்கீல்கள் இல்லாமல் கட்சி நடத்த முடியாது. அந்தளவுக்கு வழக்கறிஞர்களின் பணி மகத்தானது; முக்கியமானது. வழக்கறிஞர்கள் இல்லாமல் அரசியல் இல்லை, அரசியல் கட்சிகள் இல்லை. அதுதான் உண்மை. எல்லா இயக்கங்களையும் வளர்த்தவர்கள் வழக்கறிஞர்கள் தான்!

காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் வளர்த்தவர் வ.உ.சிதம்பரனார். அவர் ஒரு வழக்கறிஞர்! தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்பட்டவர் சிங்காரவேலர். அவர் ஒரு வழக்கறிஞர்! சுயமரியாதை இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தவர் நாகர்கோவில் பி.சிதம்பரம். அவர் ஒரு வழக்கறிஞர்! நீதிக்கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தவர் ஆற்காடு இராமசாமி முதலியார். அவர் ஒரு வழக்கறிஞர்! இன்னும் சொன்னால் வழக்கறிஞர்களால் நிரம்பி வழிந்த கட்சி தான் நீதிக்கட்சி! அந்த வரிசையில் திராவிட முன்னேற்றக் கழகமும் வழக்கறிஞர்களால் நிறைந்த இயக்கம் தான்!

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

மூத்த வழக்கறிஞர் வி.பி.ராமன் அவர்களால் உருவாக்கப்பட்டது வழக்கறிஞர் அணி. அப்போது சென்னையில் இருந்த வழக்கறிஞர்கள் மட்டும் அதில் பங்கெடுத்து வந்தார்கள். அதன்பிறகு ஏ.எல்.சுப்பிரமணியம் அவர்களும், என்.வி.என்.சோமு அவர்களும், கணபதி அவர்களும் சட்டத் துறை மீது மிகுந்த அக்கறை எடுத்து செயல்பட்ட காரணத்தால் சட்டத்துறையானது அனைத்து மாவட்டங்களிலும் விரிவடைந்தது.

நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களது முயற்சிகளுக்குப் பிறகு சட்டத்துறை முழுமை அடைந்தது என்று சொல்லத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்தது. அதனை சண்முகசுந்தரம் அவர்களும், விடுதலை அவர்களும், என்.ஆர்.இளங்கோ அவர்களும், வில்சன் அவர்களும், கிரிராஜன் அவர்களும், மற்ற தலைமைக் கழக வழக்கறிஞர்களும் மேலும் மேலும் வளர்த்து வருகிறார்கள்.

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் கழகம் காக்கும் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு, நான் குறிப்பிட்ட இந்த மேடையில் இருப்பவர்கள் தான் காரணம். எனவே தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த நேரத்தில் மூன்று நீதியரசர்களை நினைத்துப் பார்க்கிறேன்! ஒருவர் நீதியரசர் ரத்தினவேல்பாண்டியன் அவர்கள். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். அவரை 1974-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் இரத்தினவேல்பாண்டியன் அவர்கள்!

மாண்புமிகு கோகுல கிருஷ்ணன் அவர்கள், 1969-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனார்கள். குஜராத் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார்கள். மாண்புமிகு நீதியரசர் மோகன் அவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்கள். தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவில் நீதிபதியாகவே வந்து கலந்து கொண்ட கம்பீரமான நீதியரசர்கள் தான் மோகன் அவர்களும் வரதராஜன் அவர்களும்!

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்தபோது நீதிபதிகள் மட்டும் பங்கேற்ற புகழஞ்சலிக் கூட்டத்தை பெரியார் திடலில் நடத்தினோம். அப்போது பேசிய நீதியரசர் மோகன் அவர்கள், “இந்த மேடையில் இருக்கும் ஒரே ஒரு நீதிபதியைத் தவிர மற்ற அனைவரும் அண்ணா, கலைஞரால் நீதிபதியாக ஆக்கப்பட்டவர்கள்” என்று பேசினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது உங்களைப் போன்ற வழக்கறிஞர்களை உருவாக்கிய இயக்கம் மட்டுமல்ல, நீதிபதிகளை உருவாக்கிய இயக்கம்!

கழகத்துக்கு துணை செய்யும் அமைப்பாக வழக்கறிஞர் அணியை நான் சொல்ல மாட்டேன். கழகத்துக்கு துணிச்சலை வழங்கும் அமைப்பாக வழக்கறிஞர் அணியை நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக இதுபோன்ற அமைப்புகளை, துணை அமைப்புகள் என்று தான் சொல்வோம். ஆனால் வழக்கறிஞர் அணியானது, துணிச்சல் தரும் அமைப்பாக உள்ளது!

இன்றைக்கு அமைப்புச் செயலாளராக ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அமர்ந்திருக்கிறார் என்றால் சட்டத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாகத்தான் இந்த உயர்வைப் பெற்றுள்ளார். தனது சொந்த வழக்குகளை விட கழக வழக்குகளைத் தான் அதிகம் நடத்தினார். இன்றைக்குக் கழகத்தால் தாக்கல் செய்யப்படும் எந்த வழக்காக இருந்தாலும், கோர்ட் ஸ்டாம்ப் பேப்பருக்கு அடுத்து ஆர்.எஸ்.பாரதி என்ற பெயர் நிச்சயமாக இருக்கும்.

இங்கே இந்த மேடையில் சட்டத்துறைத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அமர்ந்திருக்கிறார். அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். அம்மையார் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கை தாக்கல் செய்வதற்கான முயற்சியில் அவர் தனது வீட்டில் மும்முரமாக இருந்தபோது கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளானார். கொஞ்சம் தப்பி இருந்தால் நம்மிடம் இருந்து சண்முகசுந்தரம் பிரிக்கப்பட்டு இருப்பார். இந்த தியாகத்துக்கு இணையானது வேறு என்ன இருக்கிறது? அதனால் தான் இது துணை அமைப்பல்ல, துணிச்சல் அமைப்பு என்று சொன்னேன்.

நீதிமன்றங்களில் ஒலிக்கும் இந்தத் துணிச்சல்காரர்கள் குரல் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கறிஞர் அணியைச் சார்ந்தவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆர்.சண்முகசுந்தரத்துக்கு அந்த வாய்ப்பை தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார்கள்.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் இன்று மாநிலங்களவையில் இருக்கிறார்கள். மற்ற அணியைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இது. இன்னும் சொன்னால் நம்முடைய கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒரு வழக்கறிஞர்! துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா ஒரு வழக்கறிஞர்! அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்கறிஞர்! அதனால் தான் வழக்கறிஞர்கள் இல்லாமல் கட்சி நடத்த முடியாது என்று நான் முதலிலேயே குறிப்பிட்டேன்!

இவை அனைத்துக்கும் மேலாக எனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது சட்டத்துறையால் கிடைத்து என்பதை எனது வாழ்நாளில்; உயிர் போகிற வரை நான் மறக்க மாட்டேன். 95 வயது வரை இந்தத் தமிழ்ச்சமுதாயத்தின் உயர்வுக்காக ஓயாமல் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, அவரது வாழ்நாள் ஆசையான 'அண்ணாவுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும்' என்ற ஆசையாவது எங்கே நிராசையாகப் போய்விடுமோ என்று நினைத்தபோது சட்டத்தின் சம்மட்டியால் அ.தி.மு.க. அரசின் மண்டையில் கொட்டி அந்த உரிமையை மீட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள் என்பதை நான் மறக்க மாட்டேன்.

அன்றைய தினம் நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் அனைவரும் தலைவரை இழந்து நின்றீர்கள். நான் தலைவரோடு சேர்த்து எனது தந்தையை இழந்து நின்றேன். ஒரு தலைவருக்கு தொண்டன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும் - ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையையும் ஆற்றியாக வேண்டும்!

இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சவாலை அன்றைய தினம் நான் எதிர்கொண்டேன். தலைவரை இழந்த சோகத்தில் இருக்கும் போது, அவருக்கான உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டது.

இடம் தர மறுத்தால், தடையை மீறி தலைவர் கலைஞரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வது என்ற முடிவோடு நான் இருந்தேன். அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை நினைத்தும் கவலைப்பட்டேன். தொண்டர்களுக்கும் ஏதும் ஆகிவிடக்கூடாது, அதேநேரத்தில் நமது எண்ணமும் நிறைவேற வேண்டும் என்று யோசனையில் இருந்தேன்.

அப்போது எனது பாதிப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சட்டத்துறை போராடியது. பாதி பொறுபல்ல; முழு பொறுப்பையும் ஏற்று போராடியது. வழக்கறிஞர் வில்சன் வந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று சொன்னபோது என் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனடியாக அது நடக்குமா? என்று யோசித்தேன். 12 மணி நேரத்துக்குள் அந்த உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள் நம்முடைய வழக்கறிஞர்கள்.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 'எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது' என்ற அண்ணாவுக்கு அருகில். 'ஓயாமல் உழைத்தவர் இங்கே ஓய்வெடுக்கிறார்' என்று கலைஞரை உடன் வைக்கும் உரிமையை நிலைநாட்டிக் கொடுத்தவர்கள் நீங்கள். அதனால் தான் சட்டத்துறைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்தேன். குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சண்முகசுந்தரம், விடுதலை, என்.ஆர்.இளங்கோ, வீரகதிரவன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!

இப்படி சட்டத்துறையின் சாதனைகள் என்று சொன்னால் பல மணிநேரம் சொல்லிக் கொண்டே போகலாம். நேரத்தின் அருமை கருதி சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். சட்டத்துறையின் சாதனைக்கு மகுடமாகச் சொல்லத்தக்கது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நமக்கு ஜெயலலிதா மீதோ, சசிகலா குடும்பத்தினர் மீதோ தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. 1991-96 ஆம் ஆண்டு என்பது தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொல்லத் தக்க அளவில் தமிழகம் சூறையாடப்பட்டது. இதனைத் தடுக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருந்தது. இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டிய பொறுப்பு தி.மு.க.வுக்கு இருந்தது. 1996 தேர்தலில் கழகம் அடைந்த மாபெரும் வெற்றி என்பது மக்கள் இந்தப் பணியைச் செய்வதற்கான கட்டளை தான்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கானது 18 ஆண்டுகள் நடந்தது. சென்னை தனிநீதிமன்றங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் - டெல்லி உச்சநீதிமன்றம் - பெங்களூரு தனி நீதிமன்றம் - கர்நாடக உயர்நீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் கண்கொத்திப் பாம்பாக நமது சட்டத்துறை கண்காணித்த காரணத்தால் தான் 2014 ஆம் ஆண்டு இவர்கள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை தரப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஜெயலலிதா குற்றவாளிதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவரது வாகனத்தில் இருந்து தேசியக் கொடியை கழற்ற வைத்தது கழக வழக்கறிஞர் அணி.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

இந்த ஜெயலலிதாவை புனிதரைப் போல இன்னமும் சிலர் திட்டமிடுகிறார்கள், சில ஊடகங்கள் அதனைப் பேசாமல் மறைக்கின்றன என்றால் - 18 ஆண்டுகால சட்டப்போராட்டம் என்பது சாதாரணமானது அல்ல.

அதேபோல் தான் 2ஜி வழக்கு. திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்து சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி வழக்கு அது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிறையிலே அடைக்கப்பட்டார். தங்கை கனிமொழி, இதில் சிக்க வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டார். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் தினமும் எத்தகைய துன்பத்துக்கு ஆளானார் என்பது அருகில் இருந்து பார்த்த எங்களுக்குத் தான் தெரியும்.

ஆனால் அவர்களால் வீசப்பட்ட அனைத்து அஸ்திரங்களையும் தூள்தூளாக்கியவர் தான் கருத்தரங்கைத் துவக்கி வைத்த ஆ.ராசா அவர்கள். அந்தக் காலக்கட்டத்தில் சட்டத்துறைத் தலைவரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் உழைப்பு மகத்தானது.

''ஏழு ஆண்டுகளாக நான் நீதிமன்றத்தில் உட்கார்ந்து இருந்தேன். எந்த ஆதாரத்தையும் கொண்டு வந்து தரவில்லை'' என்று நீதிபதியே சொல்லும் அளவுக்கு தங்களது வாதங்களின் மூலமாக 2ஜியை நோ - ஜி ஆக்கியவர்கள் நமது சட்டத்துறையைச் சார்ந்தவர்கள்!

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

* 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களது பறிக்கப்பட்ட பணியை பெற்றுத் தந்தது சட்டத்துறை!

* அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் செயல்பட வைத்தது சட்டத்துறை!

* தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் தகுதியைக் கேள்வி எழுப்பி வெற்றி பெற்றது சட்டத்துறை!

* ஜெயலலிதாவுக்கு தண்டனை தரப்பட்டபோது பள்ளிகளை மூடச்சொன்ன உத்தரவுக்கு தடை பெற்றது சட்டத்துறை!

* நீதிபதி குன்ஹாவை விமர்சித்த வேலூர் மேயர் மன்னிப்புக் கேட்க காரணமானது சட்டத்துறை!

* காவல்துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்துறை!

* சமச்சீர் கல்விச் சட்டத்தை சட்டபூர்வமாக நிலைநாட்டியது சட்டத்துறை!

* அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதான குட்கா வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வைத்தது சட்டத்துறை!

* உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று சொல்லி வழக்கு நடத்தி, நடத்த வைத்தது சட்டத்துறை!

* தபால் தந்தி துறையில் தமிழில் தேர்வு எழுத தடை போட்டதை உடைத்தது சட்டத்துறை!

* தலைவர் கலைஞர் சிலையை நிறுவ ஈரோட்டில் தடை விதிக்கப்பட்டபோது அதனை நீக்கியது சட்டத்துறை!

* கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக உணவுப் பொருள்களும் மருந்துகளும் கொடுக்க நாம் முயன்றபோது அதற்கு தமிழக அரசு தடை போட்டது. அந்த தடையையும் உடைத்தது சட்டத்துறை!

* குரூப் 1 தேர்வுகளில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து வழக்கு போட்டது சட்டத்துறை!

* கொரோனா காலத்தில் வெளிநாட்டில் சிக்கியவர்கள் இந்தியா வரமுடியாமல் தவித்தார்கள். அவர்களுக்காக வழக்கு தாக்கல் செய்ததும் திமுக சட்டத்துறை தான். இதன் பயனாக சுமார் 286 விமானங்கள் இயக்கப்பட தி.மு.க. சட்டத்துறை தான் காரணம்!

* மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக வழக்கு போட்டு வெற்றி பெற்றது சட்டத்துறை!

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உரிமை கிடைக்க போராடியது சட்டத்துறை. அப்படி இடஒதுக்கீடு கொடுத்தபிறகும் பணம் கட்டமுடியாமல் தவித்த மாணவர் உரிமையை நிலைநாட்டியதும் சட்டத்துறை.

* மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது சட்டத்துறை!

* அரசு பணத்தை பொங்கல் பரிசு என்ற பெயரால், ஏதோ அ.தி.மு.க. பணத்தை கொடுப்பதை போல காட்டிக் கொண்ட போது போது நீதிமன்றத்துக்கு சென்று தடுத்தது சட்டத்துறை!

* ரேசன் கடைகளில் விளம்பர பலகைகள் வைக்க தடை வாங்கியது சட்டத்துறை!

* எடப்பாடி பழனிசாமியின் டெண்டர் முறைகேடுகளைக் கண்டுபிடித்து, அந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்ற உத்தரவைப் பெற்றதும் சட்டத்துறை!

* முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் சிலர் மீது ஆளுநரிடம் ஊழல் புகாரை கொடுத்துள்ளோம். அதற்கான தரவுகளை திரட்டிக் கொடுத்ததும் சட்டத்துறை!

* அடுத்த பட்டியலை திரட்டிக் கொண்டு இருப்பதும் சட்டத்துறை தான்!

- இப்படி நான் சொல்லிக் கொண்டே இருக்கலாம். தலைமைக் கழகத்துக்கான துணை அமைப்பாக இல்லாமல், இணை அமைப்பாக சட்டத்துறை செயல்பட்டு வருகிறது.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

'சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர்களான நீங்கள் சாதாரண விளக்குகள் அல்ல. ஒளிவீசும் உதயசூரியன்களாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கான வேலைகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்பதையும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் நான்கே மாதத்தில் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். மத்திய மாநில அரசுகளின் அதிகார பலம் அவர்களுக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள். அது ஒன்றும் ரகசியம் அல்ல. அதனை தலைமைக் கழகம் எதிர்கொள்ளும். அந்த நேரத்தில் சட்டத்துறையின் பணி மிக முக்கியமானது என்பதை நான் சொல்லத் தேவையில்லை!

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதே வார் ரூம் என்ற அமைப்பை வழக்கறிஞர் அணி, நம்முடைய தலைமைக் கழகத்தில் உருவாக்கியது. மாநிலம் முழுவதும் எழக்கூடிய சட்டச்சிக்கல்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து சேர்த்து தீர்வு காண முயற்சித்தீர்கள். அதேபோல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வார் ரூம் செயல்பட்டது. அதுவரை தலைமைக் கழகத்தில் மட்டும் உருவாக்கப்பட்ட வார் ரூம், இப்போது அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு பிரச்னைகள் அதிகமாகி விட்டன.

எனவே உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கிறது. நாட்டில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது சட்டம் தான். சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை அனைவரும் அறிவீர்கள். இன்றைக்கு சட்டத்தின் நிலைமை இதுதான். மக்கள் வாக்களிக்கும் தேர்தலுக்கு மரியாதை இல்லை! சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்துக்கு மரியாதை இல்லை! சட்டத்துக்கே மரியாதை இல்லை! இத்தகைய சூழலில் சட்டம் படித்தவர்களது கடமையும் பொறுப்பும் அதிகம்!

நீதியை நிலைநாட்ட நீங்கள் போராடியாக வேண்டும்! நேர்மையை நிலைநாட்ட நீங்கள் வாதாடியாக வேண்டும்! கழகம் நிலைபெற நீங்கள் உழைத்தாக வேண்டும்! தமிழகம் செழிக்க நீங்கள் உங்கள் உழைப்பை தந்தாக வேண்டும்! நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் நீதி இலக்கியங்கள் தான். பொழுது போக்கு இலக்கியங்கள் அல்ல.

“சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!

சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையே இருந்தது! பெரியபுராணத்தில் நீதிமன்ற நடைமுறைகள் உள்ளன! திருவிளையாடற்புராணத்தில் வரும் நக்கீரர் வாதங்களும் நமது நீதிநெறியைச் சொல்கிறது! அதில் மிக முக்கியமானது திருக்குறள். உலகத்துக்கே நீதி சொன்ன உத்தமத் தமிழன் தான் திருவள்ளுவர்.

* நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்யும் அரசனை அந்த நீதி முறையே காப்பாற்றும்.

* முறைகெட்டு ஆட்சி செய்தால் அந்த முறையே அரசனை வீழ்த்திவிடும்.

* குற்றம் புரிந்தவன் தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும்.

- இப்படி நீதியை நிலைநாட்டும் வகையில் திருவள்ளுவர் அளித்த தீர்ப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீதிமுறைகெட்ட இந்த ஆட்சியை அந்த நீதியே வீழ்த்தி விடும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவரே தனது தீர்ப்பாகச் சொல்லி விட்டார். எனவே, அநீதியான இந்த அ.தி.மு.க. ஆட்சி விரைவில் வீழும்.

நீதியை நிலை நாட்ட தி.மு.க. சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்! என இவ்வாறு உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories