தமிழ்நாடு

“பெரியாரின் கொள்கையைக் காக்க, இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் தி.க - தி.மு.க” : திருமாவளவன்

அரசியலில் திசை திருப்பலாம் என்று எத்தகைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தாலும் அது திருமாவளவனிடம் எடுபடாது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“பெரியாரின் கொள்கையைக் காக்க, இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் தி.க - தி.மு.க” :  திருமாவளவன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவனுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் அமெரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் "சமூக நீதிக்கான கி.வீரமணி விருதையும்" ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையையும் திருமாவளவனுக்கு வழங்கினர்.

அதன் பின்னர் கி.வீரமணி பேசியதன் விவரம்:

“பெரியார் உடலால்தான் மறைந்தார். ஆனால் கொள்கையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவரது கொள்கைகளை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. திராவிடர் கழகத்தின் உடன்பிறப்பாக தொல்.திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்.

இன்றைய அரசியலில் அகில இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைக்கும் தலைவர் தொல்.திருமாவளவன். மனு பிரச்சினையில் எதிரிகளை எதிர்த்து களத்தில் உறுதியாய் நின்றார். காரணம் அவர் பயின்ற இடம். பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை திருமாவளவன்.

அரசியலில் திசை திருப்பலாம் என்று எத்தகைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தாலும் அது திருமாவளவனிடம் எடுபடாது. அவரது சமூகப் பணியை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதிற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

திருமாவளவன் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் அவரது பங்கு மிகமுக்கியமான ஒன்றாக இருக்கும். சமூக நீதியை நிலைநாட்ட ஒவ்வொருவர் வீட்டிலும் அம்பேத்கர் பெரியார் படங்கள் இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும்.

பின்னர் விருது ஏற்புரை ஆற்றிய தொல்.திருமாவளவன் பேசியதாவது:

“பெரியார் கொள்கைகளை போற்றிப் பாதுகாக்க திராவிடர் கழகமும், தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு வருகிறது. இனி விடுதலை சிறுத்தைகளும் இணைந்து மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும். எனது பொதுவாழ்வை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

திருமாவளவனை தனிமைப்படுத்தவேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டும் என செயல்படும் கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக திருமாவளவனை தனிமை படுத்தமுடியாது, அரணாய் திராவிடர் கழகம் இருக்கும் என உணர்த்தும் வகையில் சரியான தருணத்தில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நான் சட்டக் கல்லூரி மாணவனாக இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் திடலில் பேச முதன் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் பேச்சே விடுதலை இதழில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. திராவிடர் கழகம் இல்லை என்றால் சமூக நீதி என்றோ ஓரங்கட்டப்பட்டிருக்கும்.

இந்திய அளவில் கொள்கை சார்ந்து சமூக நீதிக்காகப் போராடும் வலிமையான இயக்கம் திராவிடர் கழகம். சனாதனவாதிகளுக்கு சமூக நீதி அச்சுறுத்தலாக இருக்கிறது. வி.சி.க தேர்தல் அரசியலில் இருந்து சமூக நீதி பேசுவதால் வாக்கு வங்கியை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. சமூக நீதியை பாதுகாக்க தேர்தல் அரசியலை விட்டு ஒதுங்கவும் தயாராக இருக்கிறது.

சாதி மத வெறியர்களால் நேரடியாக எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து நடிகர்களை இறக்கி விட்டு காலூன்றப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கலைஞர், ஜெயலலிதா இல்லாத காரணத்தை வைத்து தமிழகத்திற்குள் வந்துவிடலாம் என நினைக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.க உடன் சேர்ந்து முறியடிப்போம்.

வெவ்வேறு கோணங்களில் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். ஆன்மீகமும் அரசியலும் எப்படி ஒருமுகமாக இருக்க முடியும்? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்துகிறார்கள். ராமர் தமிழகத்தில் எடுபட மாட்டார் எனத் தெரிந்து தமிழர் கடவுளான முருகனின் வேலை கையில் எடுத்துள்ளார்கள். சனாதனவாதிகளை விரட்டுவதை விட வேறு வேலை இல்லை.

விடுதலை சிறுத்தைகளுக்கு திராவிடர் கழகம் ஒரு பயிற்சி பாசறை. அவர்கள் சொன்னால் தேர்தலை புறக்கணித்துவிட்டு சமூக நீதியை பாதுகாப்பதற்காக போராடத் தயார். சாதி மத வெறியர்களால் அவ்வளவு ஆபத்தான சூழலில் இருக்கிறோம். திராவிடர் கழகத்துடன் இணைந்து சனாதனத்தை வேரறுப்போம் சனநாயகத்தை பாதுகாப்போம்.” என்றார்.

banner

Related Stories

Related Stories