தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை சிம்சனில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டது உருவ படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “பெரியாரின் நினைவு நாளான இன்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்துகின்றோம். சமுக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவை பரப்ப தன் வாழ்நாள் முழுக்க அயராமல் உழைத்தவர்.
பெரியார் அவருடைய கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு செல்வது ஜனநாயகத்தின் கடமை. பெரியார், அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் இன்று பெரியார் சிலையை அவமதிப்பவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மீண்டும் சமூக நீதிக்கான அரசியலை நிலை நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். சனாதன சக்திகள் வெவ்வேறு பெயர்களில் தமிழகத்தில் வேரூன்ற பார்க்கிறார்கள். அவற்றை எல்லாம் தடுக்க ஜனானயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கல்வி உதவி தொகையை நிறுத்தாது போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்துக்கு பயன் தருகிற வகையில் போஸ்ட் மெட்ரிக் உதவி தொகை வழங்க அனுமதித்த பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி.
விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதும் பொது விநியோக திட்டத்தை இழுத்து மூடுவதற்கான மறைமுக திட்டமே இந்த வேளாண் சட்டம்.
ஆன்லைன் வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முயற்சிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் பிடிவாதமின்றி இதனை திரும்ப பெற வேண்டும். ஐ. ஐ. டி யில் இட ஒதுக்கீடு தேவை இல்லை என ராம்கோபால் ராவ் அறிக்கை சமர்பித்துள்ளார் இது. சமூக நீதியை குழிதோண்டி புதைப்பது தான் பா.ஜ.க செயல். இதை கண்டிக்கிறோம்.” என திருமாவளவன் கூறினார்.