தமிழக குடியரசு கட்சியின் தலைவர் சக்திதாசன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆ.சக்திதாசன் அவர்கள், நேற்று (10.12.2020) இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து பெரிதும் வேதனையுற்றேன்.
தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் புரட்சியாளர் அம்பேத்கர் - அறிவுலக ஆசான் தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகள் மேலும் பரவிட, தன்னலம் சிறிதுமின்றிப் பாடுபட்ட தகைமையாளர் சக்திதாசன் அவர்கள் என்றால், அது மிகையல்ல.
அழகிய தமிழில், உணர்ச்சி பொங்க உரையாற்றும் வண்ணம், அவர் பெற்றிருந்த ஆற்றல்; அண்ணல் - அய்யா ஆகியோரின் கருத்துகளைப் பரப்பிட, ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆற்றொழுக்கான தமது பேச்சால், ‘சொல்லின் செல்வர்’ என, தமிழின உணர்வு கொண்டவர்களால் மிகுந்த அன்போடு அவர் அழைக்கப்பட்டார்.
90 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவாழ்வு வாழ்ந்து தூய பொதுநலத் தொண்டராக விளங்கியவர், சக்திதாசன் அவர்கள்!
அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.