தமிழ்நாடு

“மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுள்ளது.. நீராதாரங்களை காப்பது அவசியம்” - ஐகோர்ட் மதுரை கிளை

நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டது. நீர் ஆதாரங்களை அழிப்பதால், நாமே நம் தற்கொலைக்கு வழிவகுக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வருத்தம்.

“மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுள்ளது.. நீராதாரங்களை காப்பது அவசியம்” - ஐகோர்ட் மதுரை கிளை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டு காணப்படுகிறது. டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "கரூர் மாவட்டத்தில் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் அமராவதி ஆறு மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் பயணித்து, திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது. மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் விடுகின்றனர். இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

“மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுள்ளது.. நீராதாரங்களை காப்பது அவசியம்” - ஐகோர்ட் மதுரை கிளை

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தம் எப்போது மேற்கொள்ளப்படும் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கோதாவரி ஆற்று மாசுபாடால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். காரணமறியமால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அருந்திய நீரில் நிக்கல், காப்பர் அளவு அதிகமிருந்ததாக தெரியவருகிறது.

அமராவதி ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் பதில்மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறினால் தலைமைச் செயலர் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், அமராவதி ஆற்றிலிருந்து 100 மீட்டருக்குள்ளாக, 3 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் அமராவதி ஆற்றின் அருகாமை பகுதிகளில் 68 ஆலைகள் இயங்குவதாக தெரிவித்தனர். 435 ஆலைகள் இயங்கிய நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல ஆலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது 68 ஆலைகளே இயங்கி வருகின்றன. அவை அனைத்திலும் சுத்திகரிப்பு மையங்களும் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "அனைத்து உத்தரவுகளும் காகித அளவிலேயே உள்ளன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டு காணப்படுகிறது. டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் எனக் கருத்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து,

நீதிபதிகள்: 68 ஆலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிறுவனமும் தவறிழைக்கவில்லையா?

அரசுத்தரப்பு: சில ஆலைகள் செயல்பட்டன. அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிபதிகள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இந்த கும்பலின் உறுப்பினர்களாக உள்ளனர். எப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது?

அரசுத்தரப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவதாகவும், கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.

நீதிபதிகள்: “தொடர்ந்து இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாகிவிட்டு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பதால் என்ன பயன்? அமராவதி ஆற்று நீரின் தரம் குறித்து அறிய சோதனை செய்யப்பட்டுள்ளதா? நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டது. நீர் ஆதாரங்களை அழிப்பதால், நாமே நம் தற்கொலைக்கு வழிவகுக்கிறோம்.

நீராதாரங்களை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தத்தை தொடர தமிழக அரசுக்கு மதுரை கிளை பரிந்துரை செய்கிறது. சினிமா பிரபலங்கள் தொடர்பான விவகாரங்களில் குண்டர் சட்டம் பாயும் நிலையில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் திருத்தம் கொணரலாமே? சாதாரண மக்கள் மிக முக்கியமானவர்கள்.” என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories