தமிழ்நாடு

"முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யவேண்டும்" : ஐகோர்ட் கிளை

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யவேண்டும்" : ஐகோர்ட் கிளை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரசு ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே, அரசின் இலவச பட்டா பெற்ற விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவின் இடத்திலிருந்து தன்னை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

ஆனால், ராஜா அரசுப் பள்ளி ஆசிரியராகவும் அவரது மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றியதும் தெரியவந்து. இதனை மறைத்து தான் இலவச பட்டா வாங்கியுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின்போது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றங்கள் நீதிமன்றத்திற்கு தெரியவந்ததும் மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், வறுமையில் வாழும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர், சமூக நலத்துறை செயலர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், “மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் அரசு ஊழியர், இதுபோன்ற முறைகேடான செயலில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசு ஊதியம் பெறும் ஒரு ஊழியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சமூக விரோத செயலாக நீதிமன்றம் கருதுகிறது. இவர்களை போன்றவர்களும் சமூக விரோதிகளே. முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும். முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துகள் மட்டுமல்லாமல் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும்.

அரசு ஊழியர் ஒருவருக்கு 5 பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது வெறும் பணி இடைநீக்க நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நடவடிக்கை. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் சொத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்” எனக் கண்டனம் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories