தமிழ்நாடு

“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

"தமிழ்வழிக் கல்வி பயின்றவருகு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு, 8 மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவிற்கு, 8 மாதங்களாகத் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்?"

"போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலையை முதலமைச்சர் திரு. பழனிசாமி உருவாக்க வேண்டாம்!" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளையும், 10-ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டத் திருத்த மசோதாவிற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெற அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று, சமீபத்தில் என்னைச் சந்தித்த போட்டித் தேர்வுகளுக்குப் பயிலும் மாணவர்கள் தெரிவித்தார்கள். தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞரே, 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.

அத்துறைக்கான அமைச்சர் என்ன செய்கிறார்? சட்ட அமைச்சர் என்ன மாதிரி மனநிலையில் இத்தனை மாதங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் காலம் கழிக்கிறார்?இவர்களுக்கு எல்லாம் தற்சமயம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, தமிழக அரசின் நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறாரா, இல்லையா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் - தமிழ்வழியில் பயின்றோருக்குத் தமிழக அரசுப் பணியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றி - உரிய அரசு ஆணையும் 30.9.2010 அன்றே பிறப்பித்தார். இதனால் லட்சக்கணக்கான தமிழ்வழி பயின்ற மாணவர்கள் பயனடைந்தார்கள்.

“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

அரசுப் பணிகளிலும் முன்னுரிமை கிடைத்தது. நாளடைவில் இந்த இடஒதுக்கீட்டின் பயனைப் பெற ஆங்கிலவழிக் கல்வியில் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களும் – அரசு வேலைக்காகப் பட்டப்படிப்பைத் தமிழில் பயின்றதாகக் கூறியதால் இந்த இடஒதுக்கீட்டின் முழுப் பயனும், “துவக்கம் முதல் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு”க் கிடைக்கவில்லை.

இந்நிலையில்தான், பட்டப்படிப்பு படித்தவர்கள் நிச்சயம் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும், 10-ஆம் வகுப்புப் படித்தவர்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே - அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு - சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு இவ்வளவு மாதங்களாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஏன்?

இப்போது உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கில், குரூப்-1 தேர்வுகளில் தமிழ்வழி பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் எல்லாம் - மிக முக்கியமாகத் தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றும் வாய்ப்புள்ள குரூப்-1 பதவிகளிலேயே முறையாக இந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை என்று தெரிந்தும் - முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி சட்டமன்றம் ஒப்புதல் அளித்த சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெறாமல் - ஆளுநர் அவர்களுக்கு உரிய அழுத்தம் தராமல், “அரசியல் விளம்பரத்திற்காக” ஒவ்வொரு ஊராகச் சுற்றி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

“தமிழ்வழிக் கல்வி பயின்றவருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு?”: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

“சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம்” எனச் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு கற்பனைக் கதையை “செய்தியாக்கி” அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிட்டு வந்தால் மட்டும் போதாது - நிர்வாகத்தில் எஞ்சியிருக்கின்ற நாட்களில் உள்ளபடியே முதலமைச்சர் சிறிதளவாவது கவனம் செலுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, அலட்சியம் செய்யப்பட்டு, பாழ்படுத்தப்படுவது துவக்கத்திலிருந்தே தமிழ்வழியில் பயின்று - அரசு வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறது.

எனவே, துவக்கத்திலிருந்து தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க - மார்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சரே நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தி இந்தச் சட்டத்திருத்தத்திற்கான ஒப்புதலை எவ்விதத் தாமதமும் இன்றிப் பெற வேண்டும்; தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறுவதையும் காலம் தாழ்த்தி - அதற்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திடும் சூழ்நிலையை உருவாக்கிட வேண்டாம் என அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories