மாநிலங்களவை முன்னாள் தி.மு.க உறுப்பினர் அக்னிராஜ் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
“மொழிப்போர்த் தியாகியும், மாநிலங்களவை முன்னாள் தி.மு.க உறுப்பினருமான எஸ்.அக்னிராஜ் திடீரென்று மறைவெய்தினார் என்ற ஆழ்ந்த வருத்தம் மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்குத் தி.மு.கவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை மாவட்ட தி.மு.கவின் எஃகு போன்ற உறுதி படைத்த அக்னிராஜ், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை தீபத்தை ஏந்தி, தி.மு.கவுக்கும், மக்களுக்கும் சிறப்பான பணியாற்றியவர்.
தமிழ் மொழியைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மொழிப்போரில் துணிச்சலுடன் பங்கேற்று, தாய் மொழிப் பற்றை தரணியெல்லாம் பரப்பியவர். ஜனநாயகத்தை நிலைநாட்டும் மிசா போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர். மதுரை மாவட்ட தி.மு.க செயலாளராகச் செயலாற்றி, மத்தியிலும் மாநிலத்திலும் தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தூண்டுகோலாக இருந்தவர்.
அவரின் சிறப்பான பொதுப்பணியைப் பாராட்டி, முத்தமிழறிஞர் கலைஞரால் 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட அக்னிராஜ், தமிழரின் குரலை, தமிழகத்தின் பிரச்னைகளை டெல்லியில் பிரதிபலித்தவர்.
தி.மு.க தொண்டர்களின் அன்பைப் பெற்றவரும், என் மீது மிகுந்த தனிப்பட்ட பாசம் கொண்டவருமான அவர், நான் எப்போது மதுரை சென்றாலும் என்னை வந்து சந்திக்கத் தவறாதவர். அவர் உடல்நலக்குறைவுடன் இருந்த நேரத்தில் எல்லாம் வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளேன். தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தேன்.
அப்போது கூட, 'நீங்கள் எப்போது மதுரைக்கு வருவீர்கள். நான் உங்களைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டார். 'கொரோனா காலமாக இருக்கிறது. நான் பிறகு வருகிறேன். உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறினேன். அப்படி அன்பு பாராட்டிய திராவிடப் பேரியக்கத்தின் தீரமிகு தளபதிகளில் ஒருவராக மதுரை மாநகரில் விளங்கிய அவரின் நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது. அவரது மறைவு திராவிடப் பேரியக்கத்திற்குப் பேரிழப்பாகும். அவர் விட்டுச் சென்ற மொழியுணர்வை நாம் என்றென்றும் தூக்கிப் பிடிப்போம்!
அக்னிராஜை இழந்து வாடும் அவரது மகன் கருணாநிதி மற்றும் குடும்பத்தினருக்கும் மதுரை மாவட்ட தி.மு.க தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.