தமிழ்நாடு

“தமிழக MP-க்கள் கடிதத்திற்கு இந்தியில் பதிலளித்த பா.ஜ.க அரசின் மொழிவெறியை கண்டிக்கிறேன்” : மு.க.ஸ்டாலின்

இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழக MP-க்கள் கடிதத்திற்கு இந்தியில் பதிலளித்த பா.ஜ.க அரசின் மொழிவெறியை கண்டிக்கிறேன்” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மத்திய அரசின் அமைச்சர்களுக்கு விவரம் கேட்டு ஆங்கிலத்தில் அனுப்பட்டக் கேள்விக்கு மத்திய மோடி அரசு இந்தியில் பதில் கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அதுதொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது.

தி.மு.கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர், தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்து கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு, இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பா.ஜ.க அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories