தமிழ்நாடு

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் சூரிய சக்தி மூலம் இயங்கும் நடமாடும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய  வண்டியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் திருவண்ணாமலை மாணவி.

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் உமாசங்கர். ஆன்லைன் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா தனியார் பன்னாட்டு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் வினிஷா. இவர் தனியார் பன்னாட்டு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுவயது முதலே அறிவியல் சார்ந்த புத்தகத்தை படித்து வந்த மாணவி வினிஷாக்கு அறிவியல் மீதான நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்ற வினிஷா வீட்டின் அருகாமையில் உள்ள இஸ்திரி கடைக்காரர் கரித்துண்டுகளை சாலையில் கொட்டி வைத்ததுடன் சிறிது நேரத்தில் கரித்துண்டுகளை பற்றவைத்து பயன்படுத்தியதைக் கண்டு, இதனை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தும் நோக்கில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சூரிய சக்தி மூலம் இயங்கும் நடமாடும் இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் தன்மை கொண்ட இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை வடிவமைத்தார்.

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்து திருவண்ணாமலை மாணவி சாதனை- மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இந்த வண்டியின் மேற்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, 100AH திறன்கொண்ட மின்கலன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டரியை  5 மணி நேரம் சூரிய ஒளியைக் கொண்டு சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை தொடர்ந்து இஸ்திரி செய்ய முடியும்.

இஸ்திரி கடைக்காரர்கள், துணியை இஸ்திரி செய்ய மரத்துண்டுகளை எரித்துப் பெறப்படும் கரித்துண்டுகளை கொண்டு மாசு ஏற்படுத்தும் வகையில் இஸ்திரி செய்வதை தடுக்கும் வகையில், இதுபோன்ற புதிய கருவியைக் கண்டு பிடித்ததாகவும், ஒருமுறை முதலீடு செய்தால் 7 முதல் 8 ஆண்டுகள் வரை இஸ்திரி கடைக்காரர்கள் பயன் பெறலாம் என்றும் தெரிவித்த மாணவி, இதற்காக 30 முதல் 40 ஆயிரம் வரை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக கடந்த 2019ம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இக்நைட் விருதை பெற்றுள்ளார். இப்பொழுது ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்வீடன் நாட்டின் துணைப் பிரதமர் இசபெல்லாலோவிடமிருந்து இன்று இணையவழி நிகழ்வில் பட்டயம், பதக்கம் மற்றும் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை எஸ்கேபி பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர் சூரியசக்தி மூலம் இயங்கும், காற்று மாசுபடுவதைக் குறைக்கக் கூடிய சலவைப்...

Posted by M. K. Stalin on Wednesday, November 18, 2020

இந்த கண்டுபிடிப்பிற்காக பாரத பிரதமரின் 18 வயதிற்குட்பட்டவரின் உயரிய விருதான பாரத பிரதமர் பால் சக்தி புரஸ்கார் விருது இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவி வினிஷாவை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருவண்ணாமலை எஸ்.கே.பி பள்ளி மாணவி வினிஷா உமாசங்கர் சூரியசக்தி மூலம் இயங்கும், காற்று மாசுபடுவதைக் குறைக்கக்கூடிய சலவைப் பெட்டியைக் கண்டுபிடித்ததற்காக சூழலியலுக்கான ஸ்வீடன் நாட்டின் பெருமை மிகு விருதினைப் பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்!

அவரது திறன்மிகு கண்டுபிடிப்புக்காக இந்திய அரசின் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரதமரின் தேசிய பாலசக்தி புரஷ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது!

இளந்தலைமுறையினருக்கு ஊக்கம் தரும் வகையில் ஆக்கமிகு படைப்பினை உருவாக்கிப் பெருமை சேர்த்துள்ள மாணவி வினிஷா உமாசங்கருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

வினிஷா.திருவண்ணாமலை SKP international பள்ளி மாணவி. காற்று மாசினை குறைக்க கரித்துண்டுக்கு பதில் சூரிய மின்சக்தியில்...

Posted by Udhayanidhi Stalin on Wednesday, November 18, 2020

அதேபோல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், “வினிஷா, திருவண்ணாமலை எஸ்.கே.பி இண்டர்நேஷனல் பள்ளி மாணவி.

காற்று மாசினை குறைக்க கரித்துண்டுகளுக்கு பதில் சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்துள்ளார். இப்படைப்பு ஸ்வீடனில் நடந்த Children's Climate Prize போட்டியில் முதலாவதாக வென்றதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories