தமிழ்நாடு

“முதல்வர் தாயார் படத்துக்கு மரியாதை” : முதலமைச்சரை நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், முதலமைச்சரை சந்தித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), உடல்நலக் குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தயாரின் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், உறவினர்கள், அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சிலுவம்பாளையத்தில் உள்ள மையானத்தில் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த ஒருவார காலமாக சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்றைய தினம் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், இன்று (19-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, தவுசாயம்மாள் அவர்களது திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி ஆகியோர் சென்றிருந்தனர்.

banner

Related Stories

Related Stories