தமிழ்நாடு

சமூகநீதி மண்ணில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதரிக்கு அவமானம்.. இதுதான் ‘அம்மா’ ஆட்சியா? - கி.வீரமணி கண்டனம்!

சமூகநீதி மண்ணில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதரிக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டது தொடர்பாக முதல்வர் தனி கவனம் செலுத்தி சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதி மண்ணில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதரிக்கு அவமானம்.. இதுதான் ‘அம்மா’ ஆட்சியா? - கி.வீரமணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டத்தில் தெற்கு திட்டை ஊராட்சியில் தலைவராகிய பிறகும் கூட தாழ்த்தப்பட்ட சமூக சகோதரிக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதை தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதரி ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சித் தலைவராகிய பிறகும் கூட, கூட்டம் நடைபெறும் போது அவரை தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியுள்ளது நம் நாடு இன்னமும் சமூக விடுதலை - சமத்துவம் பெறாத நிலையிலுள்ளது என்பதைத்தானே காட்டுகிறது!

“தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது குற்றம்“ என்று அரசமைப்புச் சட்டம் 17ஆவது விதி கூறுவதும், அதன்மீது பிரமாணம் எடுப்பதும், எல்லாம் வெறும் சடங்கு சம்பிரதாயங்கள்தானா?

சட்டம் பல்லில்லாத ஜாதி வெறி ஆணவத்துக்குப் பணிந்துபோகும் அருவருக்கத்தக்க நிலை 21ஆம் நூற்றாண்டிலும் ஏன் தொடருவது; அந்த சகோதரி அமர்ந்தால் “நாற்காலி” தீட்டுப்பட்டுப் போகுமா?

அதுபோல கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், ஓர் ஊராட்சி மன்றத்தில் கொடியேற்ற ஊராட்சி மன்றத் தலைவராகிய தாழ்த்தப்பட்ட சகோதரி ஒருவர் அனுமதிக்கப்படாதது செய்தியான பிறகுதானே நடவடிக்கை எடுக்கப்பட்டது? சமூகநீதி மண்ணிலா இந்தக் கொடுமை?

கோவை மாவட்டத்திலும் இந்நிலை உள்ளது. சில ஊராட்சிகளில், இந்த ஆட்சியில் அதுவும் “அம்மா ஆட்சி” என்று பெருமைப்பட்டு கொள்ளும் அம்மாக்கள் SC., ST., என்று அவர்களை இப்படி அவமானப்படுத்துவது அவர்களுக்கு அவமானம் அல்ல; இந்த ஆட்சிகளுக்குத்தான் அவமானம்.

இதுவே தொடர் கதையாகக் கூடும். உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்து, சமத்துவம், சகோதரத்துவம் நிரந்தரமாகவும், போதிய சட்டப் பாதுகாப்புள்ள நடைமுறைகள் நிலவவும் உறுதி அளிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories