தமிழ்நாடு

“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா?” - பால் முகவர்கள் சங்கம்!

மேலும் ஆவின் நிறுவனத்தின் நடக்கும் ஊழல்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலைத்தான் பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகங்கள் செய்து வருகின்றன என பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா?” - பால் முகவர்கள் சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விவசாயிகளின் தோழன் என சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களின் உழைப்பில் உருவான ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து காத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் அனைத்து தொழில்களும் முற்றிலுமாக முடங்கிப் போனதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு பணிகளுக்கும், நிவாரணங்கள் வழங்கிட அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாலும் பல்வேறு நிதி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன.

இந்நிலையில் 2021ல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அம்மாவட்ட மக்களுக்கு நல்லது செய்வது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தில் தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் அமைக்க வேண்டும் என அம்மாவட்ட மக்களின் உணர்ச்சிகளை தூண்டி பல அமைச்சர்கள் கபட நாடகமாடி வருகின்றனர்.

“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா?” - பால் முகவர்கள் சங்கம்!

இந்நிலையில் அதனை உறுதிபடுத்தும் விதமாக தமிழக அரசின் பால்வளத்துறைக்கு இரண்டாவது ஆணையர் அலுவலகத்தை மதுரையில் அமைக்க திட்டமிட்டு, பால்வளத்துறை சார்பில் கடந்த 05.03.2020 அன்று (கடித எண் 3083/B1/2019) நிதித்துறை சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டு ஆறு மாதத்திலேயே அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டுமென்று, அரசு ஊழியர் ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்புவிப்பு இவற்றில் கைவைக்கும் தமிழக அரசு இவ்விடயத்தில் அவசரம் காட்டியுள்ளது ஏனோ?

கடந்த 31.07.2020அன்று தமிழக நிதித்துறையின் இசைவு (எண் UO No. 25061/2020) பெறப்பட்டதையடுத்து மதுரை மாநகரில் பால்வளத்துறைக்கு இரண்டாவது மண்டல அளவிலான ஆணையர் அலுவலகம் அமைத்திடவும், அதற்கு அதிகாரிகளை நியமனம் செய்யவும் பால்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்பில் கடந்த 04.08.2020அன்று அரசாணை (G.O.(D).198) வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு ஊதியமும், அந்நோய் தொற்று காரணமாக மரணமடைந்த முன்களப் பணியாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட முடியாத சூழல் நிலவும் போது தற்போது மதுரை மாநகரில் ஆவின் நிறுவனத்திற்கு மற்றொரு தலைமை அலுவலகம் அமைக்கும் முடிவை அவசர, அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன..? என்பதை தமிழக அரசும், பால்வளத்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.

“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா?” - பால் முகவர்கள் சங்கம்!

மேலும் ஆவின் நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் நடக்கும் ஊழல்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலைத்தான் பால் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகங்கள் செய்து வருகின்றன.

எங்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த மாதம் தென் மாவட்டங்களில் உள்ள BMCகளில் (Bulk Milk Cooler) நடக்கும் தில்லுமுல்லுகளை கண்டறிய, கால்நடைத்துறைச் செயலாளரின் உத்தரவின் படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டம் மேலத் திருமாணிக்கம், எஸ்.எம்.அம்மாப்பட்டி BMCகளில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இராமர் என்பவர் கைது செய்யப்பட்டார். சுமார் 69 இலட்சம் ரூபாய் போலிக் கணக்கு மூலம் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டதோடு ஆவின் ஊழியர்கள் இருவரும், ஒரு துணைப்பதிவாளர் மற்றும் இரண்டு முதுநிலை ஆய்வாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தரமற்ற பால் கொள்முதலை தடுக்காமல், போலி பில்லுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு காரணமாக இருந்த மதுரை ஆவின் பொது மேலாளர், உதவி பொதுமேலாளர் (கணக்குகள்), உதவி பொது மேலாளர் ( பண்ணை பராமரிப்பு) ஆகியோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியது பால் பண்ணை மேம்பாட்டுத் துறை.இந்த கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஆவின் நிறுவனம் சுமார் 40லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் நேரத்தில் பால் விற்பனையை அதிகப்படுத்த பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுத்ததால் ஆவின் பால் விற்பனை என்பது வெறும் 1.5லட்சம் லிட்டர் மட்டுமே உயர்ந்துள்ளது.

மேலும் பால் கொள்முதல் அதிகரித்து விற்பனை அதிகரிக்காத காரணத்தால் உபரியான பால் ஆவின் பண்ணைகளில் சுமார் 12ஆயிரம் டன் பால் பவுடராக தேக்கமடைந்துள்ளது. இந்த பால் பவுடரை ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்தா விட்டால் அவ்வளவும் வண்டுகளுக்கும், புழுக்களுக்கும் தீவனமாகி ஆவின் நிறுவனம் சுமார் 300கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்திக்க நேரிடும்.

“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா?” - பால் முகவர்கள் சங்கம்!

எனவே ஆவின் நிறுவனம் இழப்பை சந்திப்பதை தடுக்க தேவை இரண்டாவது தலைமை அலுவலகம் அல்ல. உடனடியாக பால் விற்பனையை அதிகப்படுத்த தேவையான போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தான் என்பதை தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஏற்கனவே பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை பால்வளத் துறை ஆணையரின் கீழ் இருந்து, தணிக்கைக்கு முட்டுக்கட்டைப் போட்டு வந்ததை உணர்ந்த அரசின் நிதித் துறை, தணிக்கைத் துறையை தங்களின் கீழ் கொண்டு வந்தது போல், பால் கூட்டுறவுகளின் துணைப் பதிவாளர் அலுவலகங்கள் மாநில கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள மாநில கூட்டுறவு சங்கங்களின் கீழ் கொண்டு வருவதே, ஆவின் நிர்வாகம் சீர்பட வழி வகுக்கும்.

"அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அறுபத்தெட்டு அரிவாள்" என்ற சொலவடை போன்று கூடுதல் செலவினங்களை ஏற்படுத்தும் பால்வளத் துறையினை சீரமைக்க வேண்டியது அவசியமும், அவசரமும், காலத்தின் கட்டாயமாகும்.

"விவசாயிகளின் தோழன்" என சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களின் உழைப்பில் உருவான ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து காத்திட உடனடியாக சீர்திருத்த நடவடிக்கை எனும் சாட்டையை சுழற்ற வேண்டும். செய்வீர்களா முதல்வரே?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories