தமிழ்நாடு

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் நிலையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்.

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளின் மூலம் படிக்கும் நிலையில், மாணவர்களிடம் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய - மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கவும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இதனால் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!

இதனால், பள்ளி முதல் கல்லூரிகள் வரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவர்கள் மன உளைச்சலால் தற்கொலை முடிவைத் தேடுகின்றனர். ஒருபக்கம் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபக்கம் மாணவர்களின் பெற்றோர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அதாவது, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் வழக்கமாக வசூல் செய்யும் பணத்தையே தற்போதும் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் பெற்றோர்களிடம் நிர்பந்தம் செய்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து குடும்ப பொருளாதாரத்தையே நகர்த்த முடியாத சூழலில், இந்த கல்விக் கட்டணம் பெரும் இடியாக அவர்கள் வாழ்வில் விழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்துடன் சேர்த்து ஆய்வகம், இணையம் என பல வடிவங்களில் கட்டணம் நிர்ணயித்து 50,000 முதல் 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!
ThePrint

தனியார் பள்ளிகள்தான் இதுபோல தேவையற்ற கட்டணங்கள் விதித்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகிறது என்றால் தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகமே அவசியமில்லாத கட்டணங்களை செலுத்த மாணவர்களை நிர்பந்திக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான இந்தாண்டு கல்விக் கட்டணத்தை அறிவித்துள்ளது. அதில் வழக்கமாக வசூலிக்கப்படும் அனைத்து கட்டணங்களை இந்த முறையும் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.

அதாவது, கல்விக் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரி மேம்பாட்டுக்கான கட்டணம், நூலக கட்டணம், கணினி மற்றும் இதர ஆய்வுக் கூடக் கட்டணம், மருத்துவ உபகரணங்களுக்கான கட்டணம், இன்டர்நெட், விளையாட்டு என ஊரடங்கில் கல்லூரிக்கே செல்லாத மாணவர்களிடம் பல்வேறு வழிகளில் அவசியமற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பை பார்த்து மிரண்டு போன மாணவர்கள், கல்லூரிக்கே செல்லாதபோது எதற்காக இந்தக் கட்டணம் என பல்கலைக்கழக துணை வேந்தர், நிர்வாகிகள், பேராசிரியர்கள் என பலரிடமும் முறையாக கேட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த பதிலையும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!

இந்நிலையில் இதுகுறித்து மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் நமக்கு அளித்த பேட்டியில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகத்தான் நடக்கிறது.

ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கி ஒருமாதம் கூட ஆகவில்லை. இந்த நிலையில் 15 நாட்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்து கல்லூரி கட்டணத்தை கட்டச்சொல்லி நிர்பந்திக்கிறார்கள். அதுவும், அந்த கல்லூரி கட்டணத்தில் நாங்கள் இந்த ஊரடங்கால் பயன்படுத்தாமல் இருக்கும் நூலகம், கணினி - ஆய்வக கட்டணம், இணையம், விளையாட்டு என அனைத்துக்கும் வசூலிக்கிறார்கள்.

வீட்டில் இருந்தே ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால் அதற்காகவே எங்களுக்கு அதிகம் செலவாகிறது. இதில் அவசியமற்றதற்காகவும் கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்? அதுமட்டுமல்லாது இந்த கட்டணம் கட்டுவதற்கு ஒரு மாதம் கூட கால அவகாசம் வழங்கவில்லை.

“ஊரடங்கு காலத்தில் இந்த கட்டணங்கள் எதற்கு?” - மாணவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் அண்ணா பல்கலைக்கழகம்!

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அபராதத்துடன் பணம் செலுத்தவேண்டும் எனக் கூறுகிறார்கள். இதனால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். பலர் தங்களின் படிப்பை தொடரமுடியாத சூழல் உருவாகும்.

எனவே தற்போது அவசியமற்ற முறையில் வசூலிக்கும் கட்டணத்தை நிறுத்தி வைக்கவேண்டும். இதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் தொடர்பான சுற்றறிக்கையில், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாள் என்றும், அபராதத்துடன் கட்டணம் செலுத்த செப்டம்பர் 5-ம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளனர். கட்டண செலுத்த தவறும் மாணவர்கள், பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டில் இருந்து ஆன்லைனில் படிக்கும் தாங்கள், பயன்படுத்தாத சேவைகளுக்கு ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நியாயமான கேள்வியை முன் வைக்கின்றனர். ஆனால் மாணவர்களின் நியாயமான கேள்விக்கு பதில் கூறாமல், வசூல் வேட்டை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம்.

மேலும், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் #AUFeesRelaxation என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும்,

மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு?

banner

Related Stories

Related Stories