தமிழ்நாடு

“நொய்யல் ஆற்றின் மீதுள்ள என்.ஜி.ஆர் பாலத்தை சீரமைக்க வேண்டும்”- கோவை ஆட்சியருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

வெள்ளலூர் நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலத்தை சீரமைத்து, பொதுமக்கள் அச்சமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெள்ளலூர் நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலத்தை, நொய்யல் ஆற்றில் செல்லும் நீரை தடுக்காத வகையில் தூண்கள் அமைத்து, அகலமான மேல்மட்ட பாலமாக சீரமைத்து, பொதுமக்கள் அச்சமின்றி செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், "கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் ரோட்டில், நொய்யல் ஆற்றின் மீது உள்ள என்.ஜி.ஆர் பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்டு உள்ளது. இந்த பழமையான பாலத்தின் பல இடங்களிலும், சுவர்களிலும், தாங்கு தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இந்த பாலம் இடிந்து விழும் சூழல் உள்ளது.

ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் , மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும்போது, இந்தப் பாலம் முழுவதுமாக மூழ்கி விடும். இதனால் இந்த பகுதியில் இருக்கும் மக்கள் போக்குவரத்திற்கும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் தற்போது பெய்த கன மழையில் இந்த பாலம் மேலும் சேதமாகி விட்டது.

இந்த பாலத்தின் உயரத்தையும், அகலத்தையும் அதிகரித்து, சாலையை சீரமைத்து, பொதுமக்கள் அச்சமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 04.09.2018, 21.01.2019, 21.02.2019 மற்றும் 13.08.2019 அன்று, கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன்.

மேலும், இந்த பாலம் சீரமைப்பது சம்பந்தமாக, கடந்த 24.01.2019 மற்றும் 25.06.2019 அன்று, கோவை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன். ஆனால், இதுநாள் வரையிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, வெள்ளலூர் வழியாக, பொள்ளாச்சி செல்லும் வழித்தடம் மற்றும் கேரளாவையும் இணைக்கும் வழித்தடமாகவும் இந்த பாலம் உள்ளதால், தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்களும், பொதுமக்களும் பயணிக்கும் இந்த பாலத்தை, எதிர்வரும் காலங்களில், மேலும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தரைப்பாலமாக இல்லாமலும், நொய்யல் ஆற்றில் செல்லும் நீரை தடுக்காத வகையில் தூண்கள் அமைத்து, அகலமான மேல்மட்ட பாலம் அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories