தமிழ்நாடு

"மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி” - திருப்பத்தூர் அருகே வெறிச்செயல்!

திருப்பத்தூரில் மூதாட்டியை ரவுடி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடி” - திருப்பத்தூர் அருகே வெறிச்செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆரிகான்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி மீனா. இவரது கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகனுக்கு திருமணமாகி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி டீ கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் திருமணம் ஆகாத நிலையில் தாயுடன் வசித்து வருகிறார்.

மூதாட்டி மீனா அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த 30 வயதான ராகுல் என்பவர் குடிபோதையில் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். பின்னர் கதவை திறந்த மூதாட்டியிடம் ஊறுகாய் வேண்டும் என்று கேட்டுள்ளார், அதற்கு அவர் இப்போது கடை திறக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகுல், திடீரென மூதாட்டியை வீட்டுக்குள் தள்ளி அவரை சரமாரியாக தாக்கியதோடு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவனிடம் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து ராகுலை உள்ளேயே வைத்து கதவை பூட்டி விட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் ஜோலார்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலிஸார் ராகுலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் மீது ஏற்கனவே பல பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ராகுல், ஆரிகான் நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள், இளம்பெண்கள், மூதாட்டிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் எனவும், இதனால் அப்பகுதி பெண்கள் வெளியே செல்வதற்கு கூட அச்சப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பாலியல் வெறிபிடித்த அந்த இளைஞர் ஆடு மாடுகளைக் கூட விட்டு வைப்பதில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் ராகுல் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்துள்ளார். சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த ராகுல், மீண்டும் அதேபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோலத்தான் சம்பவத்தன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்திருக்கிறார் ராகுல். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் அவரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories