தமிழ்நாடு

“EIA2020-ஆல் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் அபாயங்கள் எக்கச்சக்கம்” : எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

EIA 2020 அறிக்கையால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உடனடியாக இந்தச் சட்டத்தை தடுத்து நிறுத்த ஒருமித்த குரல் எழுப்பவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

“EIA2020-ஆல் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் அபாயங்கள் எக்கச்சக்கம்” : எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு வௌியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாக்கியுள்ளது. உடனடியாக இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த ஒருமித்த குரல் எழுப்பவேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

"சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020" என்று புதிய திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால் தற்போதைய சந்ததிக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் சுவாசிக்க காற்றும், உயிர்காக்க குடிநீரும் கிடைக்காமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வாழ்வதற்கு ஏதுவாக இல்லாத இடமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இனி திட்டப் பணிகளை தொடங்கலாம். 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். இந்தத் திருத்தங்கள் சுற்றுச்சூழலை சீர்குலைத்து பாதகம் விளைவிப்பதாகவும், தொழில் துறை நிறுவனங்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது, உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தவேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது என சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிபுணர் நித்தியானந் ஜெயராமன் கூறியுள்ளார்.

“EIA2020-ஆல் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் அபாயங்கள் எக்கச்சக்கம்” : எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!

அதேபோல, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், “ஊரடங்கில் தொழில்கள் முடக்கம், பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க, ஓசைப்படாமல் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, மக்களிடம் உரிய அனுமதி கேட்காமல் 191 திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இதில், செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனங்களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்தவை. இது போன்றுதான், ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ என்ற வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிவிக்கைக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

மேலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் முதன் முதலாக 1994ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 1994’ கொண்டு வரப்பட்டது. 2006ம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020’ என்ற வரைவு அறிவிக்கையை கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போக செய்து விட்டன.

இச்சட்டம் வலுவாக இருக்கும் போதே சில தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்று இல்லை. ஆறுகள் மாசுப்பட்டுள்ளன. புதிய வரைவு அறிவிக்கையில் உள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப்பாதைக்கு நாட்டை இட்டுச்செல்லும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்த வரைவு அறிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட, கேரளாவுக்கு எளிதாக அனுமதி கிடைத்து விடும். காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. தேனி நியூட்ரினோ ஆய்வகப் பணியை இனி கேட்பாரின்றி, இஷ்டம் போல் நிறைவேற்றலாம். சேலம் - சென்னை இடையிலான 8 வழிச்சாலைகளை அமல்படுத்தலாம். காவிரிப் படுகை பகுதிகளில் அமல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

தற்போது செய்யப்பட்டுள்ள சட்டத் திருத்தம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தவும், இயற்கை வளங்கள் சுரண்டப்படவும் தாராளமாக வழி வகுக்கிறது. இதனால், நாளைய தலைமுறைக்கு சுவாசிக்க சுத்தமான காற்று இருக்காது. தற்போது, மாஸ்குடன் சுற்றுவது போல, ஆக்சிஜன் சிலிண்டருடன் அலைய வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

banner

Related Stories

Related Stories