தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு மேலாண்மைக்கு தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்துசெய்க : தி.மு.க MLA

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் குப்பை கழிவு மேலாண்மைக்கு தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு மேலாண்மைக்கு தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்துசெய்க : தி.மு.க MLA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் (Apartment) குப்பை கழிவு மேலாண்மைக்கு தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இன்றைய பொருளாதார சூழ்நிலையில் தனிநபர் ஒருவர் தனியாக இடம் வாங்கி தனி வீடு கட்டி குடியிருப்பது என்பது சவாலாக உள்ளதால் பெரும்பாலான நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் அடுக்குமாடி குடியிருப்பை நாடி உள்ளனர். அவர்களால் இது மட்டுமே சாத்தியம்.

தற்போது கோவையில் ஏறத்தாழ நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள். தனி வீட்டில் வசிக்க முடியாத காரணத்தினால்தான் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கின்றனர். ஆனால் அடுக்குமாடி வீட்டில் உள்ளவர்களை வசதியானவர்கள் ஆக கோவை மாநகராட்சி கருதி அவர்களுக்கு அனைத்து விதமான கட்டணங்கள் மற்றும் வரிகளை அதிகமாக சுமத்துகிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும் சாதாரண குடியிருப்புவாசிகளே. அவர்களிடம் சேரும் குப்பை கழிவுகள் குடியிருப்பு சம்பந்தமானவையே. அப்படியிருக்கையில் அவர்களுடைய குப்பை கழிவுகளை வணிக வளாக குப்பைகளாக கருதி, உள்ளாட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை எடுப்பதை நிறுத்திவிட்டனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு மேலாண்மைக்கு தனியார் மூலம் கட்டணம் விதிப்பதை ரத்துசெய்க : தி.மு.க MLA

மேலும் அவர்களை வீடு ஒன்றுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை பணம் செலுத்தி தனியார் நிறுவனத்துடன் கழிவு மேலாண்மை செய்து கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 40,000 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 28,00,000.00 ( 28 லட்சம் ரூபாய் ) ஒரு வருடத்திற்கு சுமார் 3,36,00,000.00 ( 3 கோடியே 36 லட்சம் ரூபாய் ) தனியார் நிறுவனங்களுக்கு செல்கிறது.

உள்ளாட்சி நிர்வாகம் அறிவுறுத்தும் குப்பைகளை தரம்பிரித்து பணியையும் செய்து கொடுத்தும் , அதைத் தொடர தயாராக இருந்தும், அடுக்குமாடி குடியிருப்பில் குப்பைகளை எடுக்க புறக்கணிப்பது சரியா?

இவ்வளவுக்கும் மாநகராட்சி விதிக்கும் அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறார்கள். எனவே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இவர்களையும், சாதாரண குடியிருப்புவாசிகளாக கருதி மாநகராட்சி மூலமாகவே குப்பைகளை நேரடியாக எடுத்துக் கொள்ள கோவை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories