தமிழ்நாடு

சாத்தான்குளம்: நேர்மையான விசாரணை நடைபெற எடப்பாடியிடம் உள்துறை இருக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

உள்துறை அமைச்சகப் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலக உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்: நேர்மையான விசாரணை நடைபெற எடப்பாடியிடம் உள்துறை இருக்கக்கூடாது- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரது உயிரும் போலிஸாரின் அதிகார அத்துமீறல்களுக்குப் பலியாகியுள்ளது. இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பினாலும் கண்டனத்தாலும் தற்போது இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்ததோடு, சி.பி.சி.ஐ.டி போலிஸார் வசம் விசாரணையை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட போலிஸார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர் என நால்வரை கைது செய்ததோடு, தலைமறைவாக உள்ள ஒரு காவலருக்கு தீவிரமாக வலைவீசியுள்ளனர்.

இதற்கிடையே வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அது லக்கப் மரணம் அல்ல என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பி காவல்துறையினர் இந்த வழக்கில் இருந்து காக்கும் விதமாகச் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை முடியும் வரையில் உள்துறை அமைச்சக பொறுப்பில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலக உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜராஜன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சாத்தான்குளம் இரட்டை கொலை குறித்த எவ்வித விசாரணையும் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் பழனிசாமி உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என காவல்துறையினரை காப்பாற்றும் விதமாக பேசியுள்ளார். இது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்கத்தகுந்ததல்ல.

ஆகவே, இந்த கொலை வழக்கில் முதலமைச்சருக்கும் தொடர்புள்ளதா என்றும் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த முழு விசாரணையும் முடியும் வரையில் உள்துறை இலாகா பொறுப்பை தமிழக முதலமைச்சர் வகிக்கக் கூடாது. ஏனெனில், அவர் வசமுள்ள உள்துறையின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலிஸ் அமைப்பு வருவதால், வழக்கு நேர்மையான முறையில் நடைபெறுமா என்பதில் ஐயப்பாடு எழுகிறது.

அதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி உள்துறை பொறுப்பை வகிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். மேலும், தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணை தடம் மாறிவிடாமல் உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறவேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜராஜனின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories