தமிழ்நாடு

“சிங்காநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு” - கோவை மாநகர ஆணையாளருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

“சிங்காநல்லூர் பகுதியில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” என நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சிங்காநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு” - கோவை மாநகர ஆணையாளருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 8 நாட்கள், 12 நாட்கள், சில இடங்களில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் மிகவும் குறைந்த அழுத்தத்துடன், சன்னமாக, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகிக்கும் அவலம் ஏற்பட்டு, வரலாறு காணாத வகையில் கடுமையான குடிநீர் பஞ்சம் அதிகரித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டு காலமாக குடிநீர் திட்டம் தொடர்பாக எந்த ஒரு உள்கட்டமைப்பு பணிகளையும், மாநகராட்சி நிர்வாகம் சரியாக செய்யாத காரணத்தால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கீழ்க்கண்ட

37 வது வட்டம் ஹோப் காலேஜ் , தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகள்

38 வது வட்டம் பீளமேடு பகுதிகள்

39 வது வட்டம் பீளமேடு பகுதிகள்

40 வது வட்டம் ஆவாராம்பாளையம் பகுதிகள்

53 வது வட்டம் சித்தாபுதூர் பகுதிகள்

55 வது வட்டம் பாப்பநாயக்கன் பாளையம், பழையூர் உள்ளிட்ட பகுதிகள்

56 வது வட்டம் பீளமேடு புதூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள்

57 வது வட்டம் மசக்காளி பாளையம், வரதராஜபுரம் , லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகள்

58 வது வட்டம் நீலிக் கோணாம்பாளையம், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகள்

59 வது வட்டம் எச்.ஐ.எச்.எஸ் காலனி , ஒண்டிப்புதூர் பகுதிகள்

60 வது வட்டம் ஒண்டிப்புதூர் பகுதிகள்

61 வது வட்டம் நந்தா நகர் , நொய்யல் நகர் உள்ளிட்ட பகுதிகள்

62 வது வட்டம் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள்

63 வது வட்டம் சிங்காநல்லூர் , கள்ளிமடை உள்ளிட்ட பகுதிகள்

64 வது வட்டம் உப்பிலிபாளையம் , ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகள்

65 வது வட்டம் சௌரிபாளையம் பகுதிகள்

66 வது வட்டம் உடையாம்பாளையம் பகுதிகள்

74 வது வட்டம் GM நகர் , பாரதிபுரம் , கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகள்

75 வது வட்டம் நஞ்சுண்டாபுரம் , சாரமேடு உள்ளிட்ட பகுதிகள்

ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் 8 நாட்கள் முதல் 12 நாட்களுக்கு ஒருமுறைதான் செய்வதால் குடிப்பதற்குக் கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். சில பகுதிகளில் 20 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கும் அவல நிலை உள்ளது.

“சிங்காநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு” - கோவை மாநகர ஆணையாளருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மேடான பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. சில பகுதிகளில் குடிநீரை பெற பிரசர் பம்பு வைத்து அடிக்கவேண்டிய நிலையில் உள்ளது. குடிநீர் விநியோக அளவை நாளுக்கு நாள் குறைத்து வருவது மக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுடைய வாழ்வாதாரமாக, உயிர் நாடியாகத் திகழக்கூடிய குடிநீர் விநியோகத்தில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இந்த குடிநீர் பிரச்சினை தொடர்பாக பலமுறை மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் , உதவி பொறியாளர் (குடிநீர்) ஆகியோரை தொடர்புகொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.

கோவை மாநகராட்சி நிர்வாகம், வெளிநாட்டு தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்தோடு 26 ஆண்டுகளுக்கு, ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்னும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே உள்ளது.

தற்பொழுது குடிநீர் விநியோக பணிகளை நிர்வகித்து வரும் இந்த சூயஸ் நிறுவன பணியாளர்களின் நிர்வாக குளறுபடிகளால், முறையான குடிநீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல் பெரும் குளறுபடிகளை செய்து வருவதால் , குடிநீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த குடிநீர் பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும் எவ்வித கவலையுமின்றி, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார். பொதுமக்களுக்கு குடிக்கக் கூட குடிநீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை உள்ளது.

மேலும் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, உப்பு நீர் வழங்கும் ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, கோவை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அ.தி.மு.க கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளில், ஒரு வார்டில் 20, ஒரு வார்டில் 30, மற்றொரு வார்டில் 40 என்ற எண்ணிக்கையில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. அதாவது சராசரியாக ஒரு வார்டுக்கு, ஏறக்குறைய சுமார் 25 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. இதில் ஒரு ஆழ்குழாய் கிணறு பராமரிப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,324.00 வீதம் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது. இதை கணக்கிட்டால் ஒரு வார்டுக்கு, ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.6,97,200.00 ( 2324 X 25 NOS X 12 மாதங்கள் ) செலவு செய்யப்படுகிறது.

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 19 வட்டங்களுக்கு கணக்கிட்டால், ஒரு ஆண்டுக்கு ஏறக்குறைய 1,32,46,800 (ஒரு கோடி முப்பத்திரண்டு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து எண்ணூறு ரூபாய்) கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

“சிங்காநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு” - கோவை மாநகர ஆணையாளருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

ஆனால், மக்களின் வரிப்பணமான, இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தும், மேற்கண்ட பகுதிகளில். உப்புநீர் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல இடங்களில் உப்புநீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள், மாதங்கள் ஆனாலும், மேற்கண்ட ஒப்பந்ததாரர்களால், பழுது சரி செய்யப்படுவதில்லை.

இதனால் பொதுமக்களுக்கு உப்பு நீர் விநியோகம் சரியான முறையில் கிடைக்காமல் , அன்றாடப் பயன்பாட்டிற்கு கூட நீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

”நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். இந்த முதுமொழியை மியூசியத்தில்தான் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், இன்று நீரின்றிதான் கோவை தவிக்கிறது. தத்தளிக்கிறது.

ஆகவே ,பொதுமக்களின் நலன் கருதி சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை, சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவும்,

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உப்பு நீர் விநியோகம் சீரான முறையில், காலந்தாழ்த்தாமல் வழங்கவும்,

சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories