தமிழ்நாடு

“கோவையில் அதிகரித்துவரும் கொரோனா : முன்னேற்பாடுகள் அவசியம்” - மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவமனை தேவை என கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, தி.மு.க எம்.எல்.ஏ நா.கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“கோவையில் அதிகரித்துவரும் கொரோனா : முன்னேற்பாடுகள் அவசியம்” - மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவமனை தேவை என கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, கோவை கிழக்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “கோவை மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் நிலைமை இருக்கிறது.

தற்போது உள்ள சூழலில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நோய் பரவல் நிலவரம் கண்டறிந்து நோயாளியை உடனடியாக மீட்க முடியும்.

வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோய் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று வரை 448-ஐ கடந்துவிட்டது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 500 படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இந்த மருத்துவமனை ஒரு வார காலத்துக்குள் நோயாளிகளால் நிரம்பிவிடும் வாய்ப்பு உள்ளது.

மேலும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வந்தால் அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி இருக்கும். அரசு மருத்துவமனையிலும் மிகக் குறைவான படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.

“கோவையில் அதிகரித்துவரும் கொரோனா : முன்னேற்பாடுகள் அவசியம்” - மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க MLA வேண்டுகோள்!

அங்கே வேறு நோயாளிகளுடன் கொரோனா நோய் பாதித்தவர்களை அனுமதிப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொரோனா நோய்க்காக வேறு ஏதாவது மருத்துவ மனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை வசதியை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்து, அங்கே சிகிச்சை பெறுவதாக தெரிகிறது. வசதிக்குறைவான ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் அதிக தொகை செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசின் பொது மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்தி சிகிச்சை பெற அனுமதி வழங்கப்படுவதில்லை.

அரசு பொது மருத்துவ காப்பீடு அட்டை தொடர்பாக சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சுகாதாரத் துறையினர் முன்வரவில்லை.

நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர கோவை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சிறப்பு வார்டு தயார் செய்யலாம்.‌ தனியார் மருத்துவமனைகளில் உள்ள வென்ட்டிலேட்டர்களை தேவையான அளவு கேட்டுப் பெறலாம். நோய் அறிகுறியுடன் வருபவர்களை தனிமை படுத்துவதற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள அடுக்குமாடிகள் அல்லது கல்லூரி கட்டடங்களை பயன்படுத்தலாம்.

வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நோய் அபாய சூழல் இருக்கிறது. இங்கே தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.‌ இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், நோய் அபாயம் இன்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.

கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதாரத்துறையினர் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories