தமிழ்நாடு

“தன்னால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என அச்சம்” - நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை!

புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

“தன்னால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என அச்சம்” - நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொற்றாளர்களை போன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் வயதானவர்களையே கொரோனா தாக்கம் இறப்பு வரை இட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மைக் காலமாக எவ்வித துணை நோய் உபாதைகளும் இல்லாதவர்களும் இளம் வயதினரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

அறிகுறிகளற்ற வைரஸ் தொற்றாக இருக்கும் வேளையில் பரவலான சோதனைகள் மேற்கொள்ளப்படாததால் வைரஸ் தாக்குதல் தீவிரமாகி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரி சிங் தனக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நெல்லையப்பர் கோவில் கீழ ரத வீதியில் 100 ஆண்டுகள் பழமையான ‘இருட்டுகடை அல்வா’ இயங்கி வருகிறது. அந்தக் கடையின் உரிமையாளரே ஹரி சிங். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுநீரகத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

“தன்னால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என அச்சம்” - நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை!

இதையடுத்து ஹரி சிங் மற்றும் அவரது மகன் கோபால் சிங்குக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டதோடு, அவர்கள் இருவரையும் பெருமாள்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு வரை அல்வா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தவித்து வந்த ஹரிசிங், சிகிச்சை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று காலை அறைக்கு செவிலியர் சென்று பார்த்தபோது ஹரிசிங் தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் மாநகராட்சி நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டபின் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை மேற்கொண்டனர்.

“தன்னால் பிறருக்கும் கொரோனா பரவியிருக்குமோ என அச்சம்” - நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை!

மேலும், நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள ஹரி சிங்கின் வீட்டுக்கும், அந்த பகுதி முழுமைக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு, தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற அல்வாக் கடையின் உரிமையாளர் கொரோனாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories